கார் மீது லாரி மோதி விபத்தில் 3 பேர் பலி: அமெரிக்காவில் இந்தியர் கைது
கார் மீது லாரி மோதி விபத்தில் 3 பேர் பலி: அமெரிக்காவில் இந்தியர் கைது
ADDED : அக் 23, 2025 05:44 PM

வாஷிங்டன்: தெற்கு கலிபோர்னியாவில் கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியான விபத்தில் இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவை சேர்ந்தவர் ஜஷான்பிரீத் சிங் 21, இவர், சான் பெர்னாடினோ கவுண்டி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலின்போது, தனது லாரியை, கார் மீது மோதினார். இந்த விபத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இவர் மீது விபத்து ஏற்படுத்தியதாகவும், சட்டவிரோதமாக குடியேறியவர் என்றும் குற்றச்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இது குறித்து கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் அதிகாரி ரோட்ரிகோ ஜிமெனெஸ் கூறியதாவது:
கைதான ஜஷான்பிரீத் சிங், கடந்த மார்ச்-2022 ல் தெற்கு அமெரிக்க எல்லையை கடந்த போது எல் சென்ட்ரோ செக்டரில் எல்லை ரோந்து போலீசாரால் பிடிக்கப்பட்டார். ஆனால் தடுப்புக்காவலுக்கு மாற்றம் என்ற கொள்கையின் கீழ் அப்போதைய அதிபர் பைடன் நிர்வாகத்தால் விடுவிக்கப்பட்டார்.
அதனையடுத்து தற்போது ப்ரீட்லைனர் டிராக்டர்-டிரெய்லர் இணைப்பின் டேஷ்கேமில் இந்த விபத்து பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.விபத்தில் கொல்லப்பட்ட மூன்று பேர் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை. காயமடைந்தவர்களில் ஜஷான்பிரீத் சிங் மற்றும் ஒரு வாகனத்தின் டயர் மாற்றுவதற்கு உதவிய ஒரு மெக்கானிக் ஆகியோர் அடங்குவர்.
விபத்தை ஏற்படுத்திய ஜஷான்பிரீத் சிங் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்ததால், போக்குவரத்து நெரிசலில் மோதியதற்கு முன்பு பிரேக் அடிக்கவில்லை என்பது அவரிடம் நடத்தப்பட்ட போதைப்பொருள் தடுப்பு சோதனையில் தெரியவந்தது.
மேலும் அமெரிக்காவில் சட்டப்பூர்வ குடியேற்ற அந்தஸ்து இல்லை என்பதை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையும் உறுதிப்படுத்தியது, அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை அவருக்கு எதிராக குடியேற்றக் காவலில் பதிவு செய்துள்ளது.