ஜெர்மனி திருவிழாவில் சரமாரி கத்திக்குத்து; 3 பேர் பலி
ஜெர்மனி திருவிழாவில் சரமாரி கத்திக்குத்து; 3 பேர் பலி
ADDED : ஆக 24, 2024 09:17 AM

பெர்லின்: ஜெர்மனி திருவிழா கொண்டாட்டத்தில், மர்மநபர் ஒருவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில், 3 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஜெர்மனியின் பழமையான நகரங்களில் ஒன்று சோலிங்கன். இதன் 650 ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் திருவிழா ஒன்று கோலாகலமாக நடந்தது. அப்போது திருவிழாவில் மக்கள் கூட்டத்திற்குள் மர்மநபர் ஒருவர் கத்தியுடன் புகுந்தார். கூடியிருந்த மக்களை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்தனர்.
மேயர் இரங்கல்
சோலிங்கன் மேயர் டிம் குர்ஸ்பாக் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,'' இன்றிரவு சோலிங்கனில் உள்ள அனைவரும் அதிர்ச்சியிலும், பெரும் சோகத்திலும் இருக்கிறோம். நாங்கள் அனைவரும் ஒன்றாக எங்கள் நகர ஆண்டு விழாவைக் கொண்டாட விரும்பினோம்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். இழந்தவர்களை நினைக்கும் போது என் கண்களில் கண்ணீர் வருகிறது. இன்னும் உயிருக்குப் போராடும் அனைவருக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.
போலீசார் விசாரணை
இது பயங்கரவாத செயலாக இருக்கலாம். தாக்குதல் நடத்தியவர் தப்பிச் சென்றுவிட்டதாகவும், அடையாளம் தெரியாத அந்த நபரைத் தேடும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த ஆண்டு மே மாதம், மன்ஹெய்மில் நடந்த வலதுசாரி ஆர்ப்பாட்டத்தில் மர்மநபர் ஒருவர் கத்தியால் குத்தியதில் போலீஸ்காரர் காயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

