நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து: ஈரானில் தொழிலாளர்கள் 30 பேர் பலி; 24 பேர் மாயம்
நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து: ஈரானில் தொழிலாளர்கள் 30 பேர் பலி; 24 பேர் மாயம்
ADDED : செப் 22, 2024 02:26 PM

தெஹ்ரான்: ஈரானில் நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் கசிவு காரணமாக ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 30 பேர் உயிரிழந்தனர். 17 பேர் பலத்த காயமுற்றனர். 24 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி துரிதமாக நடந்து வருகிறது.
ஈரானில் தலைநகர் தெஹ்ரானில் இருந்து தென்கிழக்கே 540 கி.மீ., தொலைவில் நிலக்கரி சுரங்கம் ஒன்று இயங்கி வந்தது. இந்த சுரங்கத்தில் 70 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். சுரங்கத்தில் மீத்தேன் கசிவு காரணமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டனர்.
இதில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 17 பேர் பலத்த காயமுற்றனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடி விபத்தின் போது வேலை செய்து கொண்டிருந்த 24 பேரை காணவில்லை. விபத்தில் சுரங்கத்தில் சிக்கியிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர். அவர்களை தேடும் பணி துரிதமாக நடந்து வருகிறது.
விசாரணை
'சிக்கியவர்களை மீட்கவும், அவர்களின் குடும்பங்களுக்கு உதவவும் அனைத்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும். விபத்து குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது. பின்னர் தான் விபத்துக்கான முழு காரணம் தெரியவரும்' என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்தார். ஈரானில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து நடப்பது இது முதல்முறையல்ல.
கடந்த கால சம்பவங்கள்
* 2013ம் ஆண்டு இரண்டு வெவ்வேறு சுரங்கத்தில் நடந்த வெடி விபத்தில் தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழந்தனர்.
* 2009ம் ஆண்டு நடந்த விபத்துகளில் 20 பேரும், 2017ம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் 42 பேரும் உயிரிழந்தனர்.
* தற்போது (2024ம் ஆண்டு) நடந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர்.