ஆகாய விமானம் தயாரிப்போருக்கு ஆயிரம் பிரச்னைகள்: போயிங்கில் தொடங்கியது ஸ்டிரைக்
ஆகாய விமானம் தயாரிப்போருக்கு ஆயிரம் பிரச்னைகள்: போயிங்கில் தொடங்கியது ஸ்டிரைக்
ADDED : செப் 13, 2024 04:48 PM

நியூயார்க்: போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றும் 33 ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமாக போயிங் உள்ளது. சுமார் 1.50 லட்சம் பேர் பணிபுரியும் இந்த நிறுவனம், அமெரிக்க பொருளாதாரத்திற்கு 79 பில்லியன் டாலர் அளவுக்கு தனது பங்களிப்பை வழங்குகிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் விமானங்களை உலகளவில் பல்வேறு நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. சமீப நாட்களாக இந்த விமானம் விபத்தில் சிக்கியதால், நிறுவனம் சர்ச்சையில் சிக்கி உள்ளது.
இந்நிலையில், பல ஆண்டுகளாக சம்பள உயர்வு வழங்கப்படாததால், நிறுவன தொழிலாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.அடுத்த நான்கு ஆண்டுக்கு 25 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை.திறமை அடிப்படையில் போனஸ் என்பதை நீக்க வேண்டும், அவசர காலங்களில் காலவரையின்றி கூடுதல் நேரம் வேலை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி வருகின்றனர். இதை நிர்வாகம் கண்டுகொள்ளாத நிலையில் தொழிலாளர்களுடன் உரசல் போக்கு நீடித்து வருகிறது.
அடுத்த தலைமுறை வணிக பயன்பாட்டிற்கான விமானத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ள நிறுவனம், அவற்றை தொழிற்சங்கம் இல்லாத ஆலைகளில் தயாரிக்க போவதாக அறிவித்து உள்ளது.இதனையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதித்த தொழிற்சங்கத்தினர், போராட்டம் நடத்துவது பற்றி கருத்து கேட்டனர்.
தொழிலாளர்கள் மத்தியில் நடந்த ஓட்டெடுப்பில் 96 சதவீதம் பேர், ஸ்டிரைக்கில் ஈடுபடுவதற்கு ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து அந்த நிறுவனத்தில் பணியாற்றும் 33 ஆயிரம் பேர் 'ஸ்டிரைக்'கில் ஈடுபட்டு உள்ளனர். 2008ம் ஆண்டுக்கு பிறகு போயிங் நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது இது முதல் முறை ஆகும். ஊழியர்களின் ஸ்டிரைக் காரணமாக ஆர்டர் செய்துள்ள நிறுவனங்களுக்கு விமானங்களை விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்படக்கூடும்.

