ஹமாசுக்கு கடைசி வாய்ப்பு: ஞாயிற்றுக்கிழமை மாலை வரை டிரம்ப் கெடு
ஹமாசுக்கு கடைசி வாய்ப்பு: ஞாயிற்றுக்கிழமை மாலை வரை டிரம்ப் கெடு
UPDATED : அக் 04, 2025 03:32 AM
ADDED : அக் 03, 2025 10:51 PM

வாஷிங்டன்: '' இஸ்ரேலுடன் ஏற்பட்டுள்ள அமைதி ஒப்பந்தம் தான் ஹமாஸ் அமைப்பினருக்கு கடைசி வாய்ப்பு. வரும் ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் அவர்கள் கையெழுத்து போட வேண்டும்'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் கெடு விதித்துள்ளார்.
ஒப்பந்தத்தை ஏற்க சம்மதம்
காசாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் கடுமையாக தாக்கி வருகிறது. இந்த போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்கா சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசியிருந்தார். அப்போது காசாவில் போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தை ஏற்க அவர் சம்மதம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அந்த ஒப்பந்தம் ஹமாஸ் அமைப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுவரை அவர்கள் எதுவும் கூறவில்லை.
இந்நிலையில், டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மத்திய கிழக்கில் பல ஆண்டுகளாக ஹமாஸ் அமைப்பினர் ஒரு இரக்கமற்ற மற்றும் வன்முறை அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இஸ்ரேலின் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை கொன்றதுடன் அவர்களின் வாழ்க்கையை தாங்க முடியாத அளவுக்கு துயரமாக்கி உள்ளனர்.
ஹமாசுக்கு கடைசி வாய்ப்பு
2023 அக். 07 ம் தேதி நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக 25 ஆயிரம் ஹமாஸ் அமைப்பினர் கொல்லப்பட்டுள்ளனர். மற்றவர்கள் சுற்றுவளைக்கப்பட்டு ராணுவத்தினரிடம் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களின் உயிர்கள் பறிக்கப்படுவதற்கான உத்தரவுக்காக காத்திருக்கின்றனர். மீதமுள்ளவர்களை பொறுத்தவரை நீங்கள் யார் என எங்களுக்கு தெரியும். நீங்கள் வேட்டையாடப்பட்டு கொல்லப்படுவீர்கள்.
அனைத்து அப்பாவி பாலஸ்தீனியர்கள் தங்களின் சிறப்பான எதிர்காலத்துக்காக பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர வேண்டும். அவர்களுக்கு சிறப்பான உதவி செய்யப்படும். ஹமாசுக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
மத்திய கிழக்கின் மிகப்பெரிய, சக்திவாய்ந்த மற்றும் மிகவும் பணக்கார நாடுகள் அமெரிக்கா உடன் சேர்ந்து அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் எஞ்சியுள்ள ஹமாஸ் போராளிகளை காப்பாற்றும். ஒப்பந்தத்தில் உள்ள விவரங்கள் உலகிற்கு தெரியும். அனைவருக்கும் சிறந்த ஒன்றாக இருக்கும். மத்திய கிழக்கில் ஏதோ ஒரு வழியில் நமக்கு அமைதி இருக்கும். வன்முறை மற்றும் ரத்தக்களறி நிறுத்தப்படும்.
இறந்தவர்கள் உட்பட அனைத்து பிணைக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்குள் ஹமாஸ் அமைப்பினர் கையெழுத்து போட வேண்டும். ஒவ்வொரு நாடும் கையெழுத்து போட்டுள்ளனர். இது கடைசி வாய்ப்பு. ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், முன்பு யாரும் கண்டிராத வகையில், அனைத்து நரக வேதனை ஹமாசுக்கு கிடைக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் டிரம்ப் கூறியுள்ளார்