"ரஷ்யா உடனான போரை முடிவு கொண்டு வருவேன்": உக்ரைன் அதிபருக்கு டிரம்ப் கொடுத்த வாக்குறுதி
"ரஷ்யா உடனான போரை முடிவு கொண்டு வருவேன்": உக்ரைன் அதிபருக்கு டிரம்ப் கொடுத்த வாக்குறுதி
ADDED : ஜூலை 20, 2024 03:37 PM

வாஷிங்டன்: 'ரஷ்யா உடனான போரை முடிவு கொண்டு வருவேன்' என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வாக்குறுதி அளித்துள்ளார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் டிரம்ப் இருவரும் தொலைபேசி வாயிலாக பேசினர். இது குறித்து டிரம்ப் அவரது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், நானும் தொலைபேசி வழியே இன்று பேசி கொண்டோம்.
அமைதி
அமெரிக்காவின் அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சிக்கான வேட்பாளராக நியமிக்கப் பட்டதற்காக, எனக்கு அவர் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். அடுத்த அமெரிக்க அதிபராக, உலகத்திற்கு நான் அமைதியை கொண்டு வருவேன். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நன்றியுடன் இருப்போம்
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவின் அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சி வேட்பாளராக நியமிக்கப்பட்டதற்காக, டிரம்புக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டேன்.
டிரம்பிற்கு நடந்த கொலை முயற்சிக்கு கண்டனமும் தெரிவித்தேன். ரஷ்ய பயங்கரவாதத்திற்கு எதிரான எங்களுடைய திறனை வலுப்படுத்த உதவியதற்காக, அமெரிக்காவுக்கு உக்ரைன் எப்போதும் நன்றியுடன் இருக்கும். இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.