நிம்மதியாக இருக்கிறேன்: கீமோதெரபி சிகிச்சையை முடித்த வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் மகிழ்ச்சி!
நிம்மதியாக இருக்கிறேன்: கீமோதெரபி சிகிச்சையை முடித்த வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் மகிழ்ச்சி!
ADDED : செப் 10, 2024 10:24 AM

லண்டன்: பிரிட்டனின் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன், தனது கீமோதெரபி சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துவிட்டேன் என சந்தோஷமாக தெரிவித்தார்.
பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் மகன் வில்லியமன் மனைவி கேட் மிடில்டன்,42 புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தார். இளவரசி கேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தது அரசு குடும்பத்தினரை கவலை அடைய செய்தது. கடந்த ஜனவரியில் இரு வாரம் மருத்துவமனையில் கேட் மிடில்டன் அனுமதிக்கப்பட்டிருந்த போது புற்றுநோய் பாதிப்பு தெரியவந்தது கீமோதெரபி அளிக்கப்பட்டு வந்தது.
கீமோதெரபி சிகிச்சை
இந்நிலையில், இளவரசி கேட் மிடில்டன், தனது கீமோதெரபி சிகிச்சையை முடித்துவிட்டதாகவும், இந்த ஆண்டு முழுவதும் பொது பணிகளில் ஈடுபட உள்ளேன் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வீடியோவில் இளவரசி கேட் கூறியதாவது: கடந்த ஒன்பது மாதங்கள் ஒரு குடும்பமாக எங்களுக்கு நம்பமுடியாத அளவிற்கு கடினமாக இருந்தது. கோடைக்காலம் முடிவடையும் நிலையில் இறுதியாக எனது கீமோதெரபி சிகிச்சையை முடித்ததில் நிம்மதி கிடைத்துவிட்டது.
தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கிடைத்த ஆதரவிற்கு நன்றி. புற்றுநோய் பயணம் சிக்கலானது, பயமுறுத்தும் மற்றும் கணிக்க முடியாதது. நான் மீண்டும் வேலைக்கு வருவதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன், மேலும் வரும் மாதங்களில் என்னால் முடிந்தால் இன்னும் சில பொது பணிகளை மேற்கொள்வதற்காக காத்திருக்கிறேன். இந்த நேரத்தில் எங்களுக்கு உதவி செய்யும் அனைவரிடமிருந்தும் பெரும் பலத்தைப் பெற்றுள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இளவரசி கேட், ஏறக்குறைய ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவரது உடல்நிலை நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். கேட், இளவரசர் வில்லியம் தோளில் சாய்ந்திருப்பதும், பின்னர் வில்லியமுடன் சிரித்து மகிழ்வதும், கைகள் கோர்ப்பதும், பின்னர் முத்தமிட்டுக் கொள்வதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

