ADDED : டிச 16, 2025 09:01 PM

புதுடில்லி: மூன்று மாதங்களில் இந்தியாவுக்கு 3வது ஆப்கன் அமைச்சர் வருகை தந்துள்ளார்
ஆப்கன் சுகாதார அமைச்சர் நூர் ஜலால் ஜலாலி இன்று (டிசம்பர் 16) டில்லிக்கு வருகை தந்தார். இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையே சுகாதாரத் துறையில் உறவை வலுப்படுத்த பயணம் வந்துள்ளார். மூன்று மாதங்களில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட மூன்றாவது தலிபான் அமைச்சர் இவர் ஆவார்.
இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: இந்தியாவிற்கு தனது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் நூர் ஜலால் ஜலாலிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த விஜயம் ஆப்கானிஸ்தானின் சுகாதாரத்துறைக்கு இந்தியாவின் நீடித்த ஆதரவை பிரதிபலிக்கிறது. மேலும் நாங்கள் விவாதங்களை எதிர்நோக்குகிறோம். இவ்வாறு ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
* கடந்த அக்டோபரில் ஆப்கன் வெளியுறவுத்துறை அமைச்சர் அமிர் கான் முத்தாகி வருகை தந்தார்.
* நவம்பரில் ஆப்கனின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் அல்ஹாஜ் நூருதீன் அஜிஜி இந்திய பயணம் மேற்கொண்டார்.

