UPDATED : அக் 25, 2025 03:52 PM
ADDED : அக் 25, 2025 03:49 PM

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஓருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா சதமடிக்க, விராட் கோஹ்லி அரைசதம் அடித்தார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலியா வென்று தொடரை 2--0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.
இந்நிலையில் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது.டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. களம் இறங்கிய டிராவில் ஹெட் 29 ரன்னிலும், மிட்செல் மார்ஷ் 41 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.பின்னர் மேத்யூ ஷார்ட் 30 ரன்னிலும், ரென்சா 56 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்தடுத்து, ஆஸி. வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பியதால் 46.4 ஓவரில், 236 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணி வீரர் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், அக்சர் படேல் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி நிதானமாக ஆடியது. தொடக்க வீரராக களம் இறங்கிய கேப்டன் சுப்மன் கில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி சதம் அடித்தார், அவர் ஆட்டமிழக்காமல் 121 ரன்னும், விராத் கோலி ஆட்டமிழக்காமல் 74 ரன்னும் சேர்க்க, 38.3 ஓவர் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியே அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வெல்ல, இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று ஆறுதல் வெற்றியை ருசித்தது.

