ADDED : அக் 29, 2024 02:33 AM
ஒட்டாவா,கனடாவில் சாலை விபத்தில், 'டெஸ்லா' கார் தீப்பிடித்து எரிந்ததில், அதில் பயணித்த இரண்டு பெண்கள் உட்பட நான்கு இந்தியர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.
வட அமெரிக்க நாடான கனடாவில் உள்ள ஒண்டாரியோ மாகாணத்தில், டெஸ்லா கார் ஒன்று வேகமாகச் சென்றது. டொரண்டோ நகரின் லேக் ஷோர் புல்வார் பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர தடுப்பில் மோதியது.
அடுத்த சில நிமிடங்களிலேயே அதன் பேட்டரி சூடாகி, கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் பயணித்த ஐந்து பேரில், நால்வர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தனர்.
தப்பிய 25 வயது பெண் ஒருவர், அந்த சாலையில் பயணித்த வாகன ஓட்டிகளின் உதவியுடன் மீட்கப்பட்டார். படுகாயங்களுடன் போராடிய அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விசாரணையில், காரில் பயணித்த அனைவரும் இந்தியர்கள் என்று தெரியவந்துள்ளது.
பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய போது, கார் விபத்தில் சிக்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
நால்வரில் இருவர், குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் மாவட்டம் கோத்ராவைச் சேர்ந்த கேட்டா கோஹில், 30, மற்றும் நீல்ராஜ், 26, என தெரியவந்துள்ளது. மற்றொருவர், ஆனந்த் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெய்ராஜ்சிங் சிசோடியா என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்த மற்றொருவர் மற்றும் காயமடைந்த பெண் ஆகியோர் பற்றிய விபரங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
