பேஸ்புக்கில் மத நிந்தனை செய்த 4 பேருக்கு பாக்.,கில் மரண தண்டனை
பேஸ்புக்கில் மத நிந்தனை செய்த 4 பேருக்கு பாக்.,கில் மரண தண்டனை
ADDED : ஜன 26, 2025 03:03 AM
லாகூர்: பாகிஸ்தானில், முஸ்லிம் மதத்தை நிந்தனை செய்த நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் முஸ்லிம் மதத்தை நிந்தனை செய்ததாக கூறி சிராஜ் பரூக்கி என்பவர், நான்கு நபர்கள் மீது புகார் அளித்தார். எப்.ஐ.ஏ, எனப்படும் பாகிஸ்தானின் மத்திய புலனாய்வு குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணை, லாகூரில் உள்ள கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முகமது தரிக் அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
முஸ்லிம் மதத்தை அவமதித்து, பேஸ்புக்கில் வெவ்வேறு ஐ.டி.,க்கள் வாயிலாக கருத்து பதிவேற்றம் செய்த வாஜித் அலி, அபாக் அலி சாஹிப், ராணா உஸ்மான், சுலேமான் சஜித் ஆகிய நால்வரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுகின்றனர்.
இவர்கள் நான்கு பேருக்கும் மரண தன்டனை மற்றும் தலா 80 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வழக்கமாக, பாகிஸ்தானில் மத நிந்தனை சட்டம் அங்கு சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் மீது தொடரப்படும் நிலையில், தற்போது முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் மீது தொடரப்பட்டுள்ளது.

