மாலியில் இந்தியர்கள் 5 பேர் துப்பாக்கி முனையில் கடத்தல்
மாலியில் இந்தியர்கள் 5 பேர் துப்பாக்கி முனையில் கடத்தல்
ADDED : நவ 08, 2025 09:27 AM

பமாகோ: மாலி நாட்டில் தங்கி வேலை செய்து வந்த இந்தியர்கள் 5 பேர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. வறுமையில் சிக்கித் தவிக்கும் இந்த நாட்டில், அல் கொய்தா மற்றும் முஸ்லிம் அமைப்புகளுடன் இணைக்கப்பட்ட ஜிஹாதி குழுக்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றன. 2012ம் ஆண்டு முதல் ஏற்பட்டு வரும் மோதல் மற்றும் வன்முறை காரணமாக, இங்கு வெளிநாட்டவர்களை கடத்துவது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது.
இந்த நிலையில், கோப்ரி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 5 இந்தியர்களை, ஆயுதம் ஏந்தி வந்த கும்பல் ஒன்று கடத்திச் சென்றுள்ளது. இதனை அந்நிறுவனத்தின் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். மேலும், அதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் பிற இந்தியர்களை பமாகோ நகருக்கு இடமாற்றம் செய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கடத்தல் சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. கடந்த செப்டம்பர் மாதம் தலைநகர் பமாகோவுக்கு அருகே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டைச் சேர்ந்த இருவர், ஈரானைச் சேர்ந்த ஒருவர் என 3 பேரை ஜிகாதிகள் கடத்திச் சென்றனர். பிறகு, 50 மில்லியன் டாலர் மீட்பு தொகையாகச் செலுத்தியதால், அவர்கள் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

