ஈரானில் நீடித்து வரும் வன்முறை சம்பவங்களில் 5,000 பேர் பலி; குழந்தைகள், கர்ப்பிணியருக்கு குறி என புகார்
ஈரானில் நீடித்து வரும் வன்முறை சம்பவங்களில் 5,000 பேர் பலி; குழந்தைகள், கர்ப்பிணியருக்கு குறி என புகார்
ADDED : ஜன 18, 2026 10:27 PM

டெஹ்ரான்: ஈரானில், கடந்த 20 நாட்களுக்கு மேலாக நீடித்து வரும் வன்முறை சம்பவங்களில் பாதுகாப்புப் படை வீரர்கள் 500 பேர் உட்பட, 5,000 பேர் பலியானதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில், குழந்தைகள், கர்ப்பிணியர் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்கள் குறிவைத்து தாக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரானில் விலைவாசி உயர்வு, டாலருக்கு எதிரான ஈரான் கரன்சி ரியாலின் மதிப்பு மிகவும் கடுமையான சரிந்ததை எதிர்த்து, மக்கள் கடந்தாண்டு டிசம்பரில் போராட்டங்களில் ஈடுபட்டனர். டிச., 28 முதல் நடந்து வரும் போராட்டம், நாடு முழுதும் பரவியுள்ளது. ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக எழுந்த இந்த போராட்டம் வன்முறையாக மாறியது.
மரண தண்டனை
கண்ணில்படும் அரசு அலுவலகங்கள் சூறையாடப்பட்டன. அரசு வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன. நிலைமை கைமீறியதை அடுத்து, போராட்டக்காரர்களை ஒடுக்க பாதுகாப்புப் படையினரை ஈரான் அரசு களமிறக்கியது.
இவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கடுமையாக தாக்கினர்; 10,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்டு பொது சொத்துக்களை சேதப்படுத்தியவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.
மேலும், இணையதள வசதி, தொலைத்தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டன. கடந்த 20 நாட்கள் நடந்த வன்முறைகளில், 2,000 பேர் உயிரிழந்ததாக முன்பு தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், வன்முறை சம்பவங்களில், 5,000 பேர் பலியானதாக ஈரான் அரசு நேற்று தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நாட்டு அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்தாண்டு இறுதியில் துவங்கி தற்போது வரை நீடித்து வரும் கலவரம் மற்றும் போராட்டங்களில், 500 பாதுகாப்பு படையினர் உட்பட 5,000 பேர் பலியாகியுள்ளனர்.
கொடூர தாக்குதல்
பயங்கரவாதிகளும், ஆயுதம் ஏந்திய போராட்டக்காரர்களும், அப்பாவி பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது வேதனையளிக்கிறது. குறிப்பாக, கர்ப்பிணியர், குழந்தைகள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இறந்தவர்கள் தொடர்பான புள்ளி விபரங்கள் அனைத்தும் உறுதிப்படுத்தப்பட்டவை. இது, மேலும் அதிகரிக்க வாய்ப்பில்லை.
ஈரானில் நடந்த வன்முறை சம்பவங்களுக்கு முழுக்க முழுக்க வெளிநாட்டு எதிரிகளே காரணம். அவர்களின் தலையீட்டால்தான் பலி எண்ணிக்கை உயர்ந்தது. இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, ஈரானில் நடந்த கலவரங்களில், 16,000க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்து உள்ளன. மேலும், மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்றும், இறந்தவர்களில் பெரும்பாலானோர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

