பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள் 56,000 பேர் சவுதியில் இருந்து நாடு கடத்தல்
பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள் 56,000 பேர் சவுதியில் இருந்து நாடு கடத்தல்
ADDED : டிச 19, 2025 12:51 AM

ரியாத்: சவுதி அரேபியாவில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த, 56,000 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி, அரசியல் குழப்பம் என, மக்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். இதனால் ஏராளமானோர் வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்கின்றனர்.
மேலும் சிலர், சுற்றுலா விசாவில் வளைகுடா நாடுகளுக்குச் சென்று அங்கு பிச்சை எடுப்பதையே தொழிலாக மாற்றியுள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, குவைத், அஜர்பைஜான், பஹ்ரைன் உள்ளிட்ட பல மேற்கு ஆசிய நாடுகளில் பாக்., பிச்சைக்காரர்களே அதிகம் இருப்பது தெரியவந்தது.
மேற்கு ஆசிய நாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிச்சைக்காரர்களில், 90 சதவீதம் பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்குவதை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அண்மையில் நிறுத்தியது.
இந்நிலையில், முஸ்லிம்களின் புனித தலங்களான மெக்கா மற்றும் மதீனா அமைந்துள்ள பகுதிகளில் பாக்., பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, சவுதி அரேபியா குற்றஞ்சாட்டியுள்ளது. சமீப ஆண்டுகளில் அங்கிருந்து, பாக்., பிச்சைக்காரர்கள் 56,000 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இந்த பிச்சைக்காரர்கள் பெரும்பாலும் உம்ரா மற்றும் ஹஜ் விசாக்களை தவறாக பயன்படுத்தி சவுதி அரேபியாவுக்கு செல்வதாகக் கூறப்படுகிறது. பாக்., அரசு இதை தடுக்கும் முயற்சியாக, நடப்பாண்டில், 66,154 பயணியரை பறக்க தடை செய்யும் பட்டியலில் சேர்த்துள்ளது. மேலும், பிச்சைக்காக நாடு கடத்தப்பட்டவர்களின் பாஸ்போர்ட்டுகளை ரத்து செய்து, புதிய பாஸ்போர்ட் வழங்குவதையும் தடை செய்துள்ளது.
ஆனால் இந்த தடைகளையும் மீறி, அவர்கள் மோசடி செய்து பிச்சை எடுப்பதற்காக பயணம் மேற்கொள்வதாக பாக்., துாதரக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் உண்மையான பாகிஸ்தானிய பயணியர், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

