ADDED : ஜன 26, 2025 11:17 PM
எல் - பஷார்: சூடானில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில், 70 பேர் பலியாகினர்.
வட ஆப்ரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடக்கிறது. எஸ்.ஏ.எப்., என்றழைக்கப்படும், சூடான் ஆயுதப்படைக்கு அப்தெல் பத்தா அல் - புர்ஹான் என்பவர் தலைமை வகிக்கிறார்.
இவரது படைக்கும், ஆர்.எஸ்.எப்., என்றழைக்கப்படும், 'ரேபிட் சப்போர்ட் போர்சஸ்' எனப்படும் பயங்கரவாத படைக்கும் இடையே 2023ல் போர் துவங்கியது.
இரு தரப்பினருக்கும் இடையே ஓராண்டுக்கு மேலாக நீடித்து வரும் போரில், ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆர்.எஸ்.எப்., பயங்கரவாத குழுவுக்கு பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்கள் ஆதரவு அளித்து வருவதால், இந்த குழுக்கள் முக்கிய இடங்களில் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், சூடானின் வடக்கு டார்பர் பகுதியில் எல் - பஷார் இடத்தில் உள்ள மருத்துவமனை மீது ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் வாயிலாக நேற்று பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.
மருத்துவமனையில் நோயாளிகள் நிறைந்திருந்த நிலையில் நடத்தப்பட்ட தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தனர்; 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலை ஆர்.எஸ்.எப்., படை நிகழ்த்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மருத்துவமனை மீதான தாக்குதல் குறித்து, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'சூடானில் மருத்துவமனைகள் மீதான தாக்குதல்களை நிறுத்தும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
'ஆனால், தாக்குதல் தொடர்வது கவலை அளிக்கிறது. சேதமடைந்த மருத்துவ வசதிகளை விரைவாக மீட்டெடுக்க வேண்டும்' என, கூறியுள்ளார்.