ADDED : ஜூலை 31, 2025 03:08 AM
பாங்காக்:தாய்லாந்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒன்பது தொழிலாளர்கள் பலியாகினர்.
தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் சுபான் மாகாணம், முயாங் மாவட்டத்தில் ஊருக்கு வெளியே பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது.
இந்தக் கட்டடம் நேற்று பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. கட்டடத்தின் இரும்பு கூரைகள் நாலாபுறமும் சிதறிக் கிடந்தன. அருகே நிறுத்தப்பட்டிருந்த கார்களும் சேதமடைந்தன. சத்தம் கேட்டு வந்த பொது மக்கள் விபத்து குறித்து மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக வந்து கட்டடத்திற்குள் சிக்கியவர்களை மீட்டனர்.
இந்த விபத்தில், ஒன்பது தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; மூன்று பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஆலை உரிமம் இன்றி செயல்பட்டதா என்றும் ஆய்வு நடக்கிறது. இதே மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் 20 பேர் பலியாகினர்.