பயங்கரவாதத்தில் மூழ்கிய நாடு; ஐ.நா.,வில் பாகிஸ்தானை கடுமையாக சாடிய இந்தியா!
பயங்கரவாதத்தில் மூழ்கிய நாடு; ஐ.நா.,வில் பாகிஸ்தானை கடுமையாக சாடிய இந்தியா!
UPDATED : ஜூலை 23, 2025 01:46 PM
ADDED : ஜூலை 23, 2025 10:13 AM

நியூயார்க்: பயங்கரவாதத்தை ஆதரிப்பதற்கும் அதன் பொருளாதாரத்தை தவறாக நிர்வகிப்பதற்கும், ஐ.நா.,வில் பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடி உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த கூட்டத்தில் பேசுகையில் பாகிஸ்தான் பிரதிநிதி இந்தியாவைப் பற்றி குறை கூறி பேசினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய நிரந்தர பிரதிநிதி தூதர் பர்வதனேனி ஹரிஷ் பேசியதாவது: ஜனநாயகம், வளர்ந்து வரும் பொருளாதாரம், பன்முகத்தன்மை கொண்ட நாடாக இந்தியா உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து தொடர் கடன் வாங்கும் நாடும், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடும் பாகிஸ்தான் தான். பயங்கரவாதத்தை ஆதரிப்பதற்காக, தனது பொருளாதாரத்தை தவறாக கையாள்கிறது. சர்வதேச சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத நடைமுறைகளில் ஈடுபடும், அதே வேளையில், சபை உறுப்பினர் ஒருவர் சமய போதனைகளை வழங்குவது முறையற்றது.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தூண்டுவதன் மூலம் அண்டை நாடு மற்றும் சர்வதேச உறவுகளின் உணர்வை மீறும் நாடுகளுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்கியது. பாகிஸ்தானின் வேண்டு கோளின் பேரில் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படுவது நேரடியாக முடிவுக்கு வந்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆண்டுகளை நாம் நிறைவு செய்யும் வேளையில், ஐ.நா. சாசனத்தில் கூறப்பட்டுள்ள பன்முகத்தன்மை மற்றும் சர்ச்சைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும். இது பற்றி சிந்திக்க இது ஒரு பயனுள்ள தருணம். ஐ.நா., பணியாளர்களாக பெண்களை ஊக்குவிப்பதில் இந்தியா முன்னோடியாக உள்ளது.
பன்முகத்தன்மை மற்றும் மோதல்களுக்கு அமைதியாக தீர்வு மூலம் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை நோக்கி செயல்படுவதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது. மோதல்களுக்கு அமைதியான தீர்வை அடைவதற்கான எந்தவொரு முயற்சியையும் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.