ADDED : ஏப் 06, 2025 11:13 PM
ஒட்டாவா: வட அமெரிக்க நாடான கனடாவில் உள்ள பார்லிமென்ட் வளாகத்திற்குள் நேற்று முன்தினம் நுழைந்த மர்ம நபரால், பார்லிமென்ட் வளாகம் மூடப்பட்டது.
கனடா நாட்டின் பார்லிமென்ட், தலைநகர் ஒட்டாவாவில் உள்ளது.
மிகுந்த பாதுகாப்பு கெடுபிடிகள் உள்ள ஈஸ்ட் பிளாக் எனும், பார்லிமென்ட் கட்டடங்கள் அமைந்துள்ள வளாகத்திற்குள், நேற்று முன்தினம் மர்ம நபர் ஒருவர் நுழைந்தார். அந்த நபர், பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தார் என துவக்கத்தில் கூறப்பட்டது.
அது குறித்த தகவல் அறிந்ததும், அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பொதுமக்கள் யாரும் பார்லிமென்ட் வளாகத்திற்குள் வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
உள்ளே இருந்தவர்கள், அறைகளை பூட்டி, பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். அந்த பகுதியில் சாலை போக்குவரத்தும் தடை செய்யப்பட்டு, பார்லிமென்ட் வளாகம் மூடப்பட்டது.
அந்த பகுதி முழுதும் சல்லடை போட்டு தேடிய போலீசார், பார்லிமென்ட் வளாகத்தின் உள்ளே மறைந்திருந்த நபரை, இரவு 11:40 மணிக்கு பிடித்து இழுத்து வந்தனர்.
யார் அந்த நபர் என்ற விபரத்தை போலீசார் தெரிவிக்கவில்லை. அவர், ஆயுதங்கள் எதையும் மறைத்து எடுத்துச் சென்றாரா என்பது குறித்தும் தகவல் இல்லை.

