மேற்காசியாவில் இனி புதிய உதயம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு
மேற்காசியாவில் இனி புதிய உதயம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு
ADDED : அக் 14, 2025 07:50 AM

ஜெருசலேம்: இரண்டாண்டு கால பேரழிவு தரும் போரை முடிவுக்கு கொண்டு வர சிறப்பாக பணியாற்றியதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாராட்டினார். மேலும் மேற்காசியாவில் புதிய உதயம் உருவாகியுள்ளதாக குறிப்பிட்டார்.
மகிழ்ச்சி
இஸ்ரேல் பார்லிமென்டில் நேற்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசியதாவது:
இரண்டாண்டுகளாக நடந்து வந்த பேரழிவு தரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நெதன்யாகு சிறப்பாக பணியாற்றினார்.
இந்த அமைதி ஒப்பந்தத்தை சாத்தியமாக்குவதில் நெதன்யாகுவின் பெரிய துணிச்சலும் தேசபக்தியும் உதவியாக இருந்தது. இந்த அமைதி ஒப்பந்தத்தின் வாயிலாக, யூதர்கள், முஸ்லிம்கள் மற்றும் அரபு நாடுகள் உட்பட அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது வரலாறு காணாத நிகழ்வு; மேற்காசியாவின் பொற்காலம். பாலஸ்தீனர்கள் பயங்கரவாதத்தையும், வன்முறையையும் விட்டு நிரந்தரமாக விலக வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இஸ்ரேல் பார்லிமென்டில் உரையாற்றிய பின் டிரம்ப், எகிப்தில் நடைபெற்ற உச்சி மாநாட்டிற்கு, எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்சியுடன் இணைந்து தலைமை தாங்கினார். இதில் ஐ.நா., பொதுச் செயலர், 20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.