இத்தாலி பிரதமர் ஜார்ஜியாவின் புகைப்படம் ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியீடு
இத்தாலி பிரதமர் ஜார்ஜியாவின் புகைப்படம் ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியீடு
UPDATED : ஆக 30, 2025 06:22 AM
ADDED : ஆக 30, 2025 05:59 AM

இத்தாலி : இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி மற்றும் சில பெண் அரசியல் தலைவர்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து, இணையதளத்தில் வெளியிட்டதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஏழு லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்ட, 'பிகா' என்ற இணையதளத்தில், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, அவரது சகோதரி அரியன்னா மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எலி ஷ்லீன் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் ஆபாசமாக சித்தரித்து வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து மெலோனி கூறியதாவது:
இந்த மோசமான சம்பவம் மன வேதனை அளிக்கிறது. இதேபோன்று ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு புண்படுத்தப்பட்ட அனைத்து பெண்களுக்கும் என் ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த நுாற்றாண்டிலும் கூட, ஒரு பெண்ணை அவமதிப்பதையும், அவர்களின் மாண்பை மிதிப்பதையும், கணினியின் பின்னால் ஒளிந்து கொண்டு பாலியல் மற்றும் மோசமான அவமதிப்புகளால் தாக்குவதை சகஜமாகவும், நியாயமாகவும் கருதுவோர் இருப்பது ஏமாற்றமளிக்கிறது-.
இதுபோன்று பெண்களின் மாண்பை குலைப்பவர்கள் உறுதியாக தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறினார்.
இந்நிலையில், பயனர்கள் தளத்தை தவறாக பயன்படுத்தியுள்ளதாக கூறி, இத்தளத்தின் நிர்வாகிகள் இணையதளத்தை தற்காலிகமாக மூடியுள்ளனர்.
மேலும், இந்நிகழ்வு இத்தாலியில் பரவலாக அனைவரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் உட்பட பல பெண்கள், அந்த இணையதளம் மற்றும் அது போன்ற பிற தளங்களுக்கு எதிராக புகார் செய்ய முன் வந்துள்ளனர்.