கொட்டினால்தான் தேள்; குட்டிய கோர்ட்டுக்கு குனிந்தார் எலான் மஸ்க்; சட்டத்துக்கு கட்டுப்படுவதாக அறிவிப்பு
கொட்டினால்தான் தேள்; குட்டிய கோர்ட்டுக்கு குனிந்தார் எலான் மஸ்க்; சட்டத்துக்கு கட்டுப்படுவதாக அறிவிப்பு
ADDED : செப் 28, 2024 11:07 AM

பிரேசிலியா: கடந்த சில நாட்களுக்கு முன்னர் ' எக்ஸ் ' சமூக வலைதளத்திற்கு தடை விதித்து இருந்த பிரேசில் உச்சநீதிமன்றம், தற்போது அபராதம் விதித்து அதிரடி காட்டி உள்ளது.
வெறுப்பை தூண்டும் பேச்சை கட்டுப்படுத்த வேண்டும், நீதிமன்றம் கேள்வி கேட்டால் பதிலளிக்க பொறுப்பான அதிகாரியை நியமிக்க வேண்டும் என எக்ஸ் சமூக வலைதளத்திற்கு பிரேசில் நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை எனக்கூறி அந்த வலைதளத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
இதற்கு எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்; விமர்சனமும் செய்து வந்தார். ஆனால் பிரேசில் உச்சநீதிமன்றம் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை. இதனால் உலகின் பெரிய நாடுகளில் ஒன்றான பிரேசிலில் எக்ஸ் தளம் இல்லாத நிலை ஏற்பட்டது.
வேறு வழியில்லாத நிலையில், கடந்த வாரம் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்படுவதாகவும், தடையை நீக்க வேண்டும் என மேல்முறையீடு செய்தது.இதனை விசாரித்த நீதிபதி அலெக்சாண்ட்ரே டி மோரஸ், நிறுவனம் முன்பு உத்தரவிட்டு இருந்தபடி, எக்ஸ் நிறுவனம் 3.4 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதத்தை செலுத்த வேண்டி உள்ளது.
இதனை செலுத்தாத பட்சத்தில், எக்ஸ் சமூக வலைதளம் மற்றும் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் சொத்துகளை முடக்குவோம். தடையை மீறிய ஒரு சிலருக்கு மட்டும் எக்ஸ் சமூக வலைதளத்தை அணுக முடிந்தது. இதற்காக கூடுதலாக 1.8 மில்லியன் டாலர் அபராதத்தை அந்த நிறுவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இது தொடர்பாக எக்ஸ் நிறுவனம் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஏற்கனவே உள்ள அபராதத்தை செலுத்த முன்வந்துள்ள அந்த நிறுவனம், புதிதாக விதிக்கப்பட்ட 1.8 மில்லியன் டாலர் அபராதத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்யவும் திட்டமிட்டு வருகிறது.