ADDED : செப் 25, 2024 06:21 AM

வாஷிங்டன்: பூமிக்கு ஒரே நிலவு தான் உள்ளது. தற்காலிகமாக செப். 29 - நவ., 25ல் இரண்டாவது நிலவு பூமியை சுற்ற உள்ளது.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான 'நாசா' பூமிக்கு அருகே சுற்றி வரும் விண்கல், வால் நட்சத்திரம் உட்பட 34,725 வான் பொருட்களை கண்காணித்து அதன் சுற்றுப்பாதை, பூமிக்கு அருகில் வரும் காலம் உள்ளிட்டவற்றை வெளியிடுகிறது. '2024 பி.டி.5' என்ற விண்கல்லை 2024 ஆக., 7ல் கண்டறிந்தது. இதன் விட்டம் 37 அடி. இது 'அர்ஜுனா' விண்கல் குடும்பத்தை சேர்ந்தது.
பூமி தன் அருகே சுற்றி வரும் விண்கற்கள், சிறுகோள் உள்ளிட்டவற்றை ஈர்த்து, அதை தற்காலிகமாக தன் சிறிய நிலவாக மாற்றுவது அறிவியல் வழக்கம்.
அதன்படி '2024 பி.டி.5' விண்கல் பூமியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு, செப்., 29 - நவ., 25 வரை 34 லட்சம் கி.மீ., துாரத்தில், மணிக்கு 3540 கி.மீ, வேகத்தில் பூமியின் இரண்டாவது நிலவாக சுற்றி வரும். பின் பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து விலகி, 'அர்ஜுனா' விண்கல் குடும்ப சுற்றுப் பாதைக்கு சென்று விடும். இதன் அளவு மிகவும் சிறியது என்பதால் பூமியில் இருந்து பார்த்தால் தெரியாது.