ஓடுதளத்தில் சென்ற விமானத்தில் திடீர் தீ விபத்து; பயணிகள் பீதி
ஓடுதளத்தில் சென்ற விமானத்தில் திடீர் தீ விபத்து; பயணிகள் பீதி
ADDED : பிப் 03, 2025 08:28 AM

டெக்சாஸ்: ஹூஸ்டன் ஓடுதளத்தில் சென்று கொண்டிருந்த விமானத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதால் பயணிகள் பீதியடைந்தனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் மிகப்பெரிய நகரமான ஹூஸ்டனில் ஜார்ஜ் புஷ் விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து நியூயார்க் செல்வதற்காக 104 பயணிகள், 5 பணியாளர்கள் என மொத்தம் 109 பேருடன் விமானம் ஒன்று புறப்பட்டு, ஓடுதளத்தில் சென்று கொண்டிருந்தது.
அப்போது, விமானத்தின் இறக்கைகளின் ஒரு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கரும்புகை வெளியேறுவதைக் கண்ட பயணிகள் பீதியடைந்தனர். உடனே சுதாரித்துக் கொண்ட விமானி, விமானத்தை சாமர்த்தியமாக நிறுத்தினார். பிறகு, தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ உடனடியாக அணைக்கப்பட்டது. இதனால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இதில், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
கடந்த சில தினங்களாக விமான விபத்துக்கள் நிகழ்ந்து வரும் நிலையில், இந்த சம்பவமும் விமானப் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.