அத்துமீறியோர் மீது நடவடிக்கை: சிரியா கிளர்ச்சி படை எச்சரிக்கை
அத்துமீறியோர் மீது நடவடிக்கை: சிரியா கிளர்ச்சி படை எச்சரிக்கை
ADDED : டிச 11, 2024 04:41 AM

டமாஸ்கஸ்: ''சிரியாவில், பஷார் அல் ஆசாத் ஆட்சியின் போது சித்ரவதை, அதிகார துஷ்பிரயோகம் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்,'' என, கிளர்ச்சி படை தலைவர் அபு முகமது அல் கோலானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேற்காசிய நாடான சிரியாவில், ஷியா பிரிவைச் சேர்ந்த பஷார் அல் ஆசாத் அதிபராக இருந்தார். இவருக்கும், பல கிளர்ச்சி குழுக்களுக்கும் இடையே, கடந்த 13 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வந்தது. அபு முகமது அல் கோலானி தலைமையிலான ஹயாத் தாஹ்ரிர் அல் ஷாம் என்ற கிளர்ச்சி படை, சமீபத்தில், தலைநகர் டமாஸ்கசை கைப்பற்றியது. இதையடுத்து நாட்டை விட்டு தனி விமானத்தில் தப்பிய பஷார் அல் ஆசாத் ரஷ்யாவில் தஞ்சமடைந்தார்.
இந்நிலையில், சிரியாவில் ஆட்சி அதிகார பரிமாற்றத்தை ஒருங்கிணைக்க, அந்நாட்டின் பிரதமர் முகமது அல் - ஜலாலியை, கிளர்ச்சி படைத்தலைவர் அபு முகமது அல் கோலானி நேற்று சந்தித்து பேசினார்.
இது தொடர்பாக, அபு முகமது அல் கோலானி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு: சிரியா மக்களுக்கு சேவை செய்ய உத்தரவாதம் அளிக்கும் அதிகார பரிமாற்றத்தை ஒருங்கிணைக்க, பிரதமர் முகமது அல் - -ஜலாலியை சந்தித்து பேசினேன். நாட்டு மக்களை சித்ரவதை செய்த குற்றவாளிகள், அதிகார துஷ்பிரயோகம் செய்தவர்கள், கொலைகாரர்கள், அடக்குமுறையைக் கையாண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம். அவர்கள் கடுமையான விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.