ADDED : அக் 12, 2025 11:34 PM

காபூல்: ஆப்கானிஸ்தானில் பாக்., ராணுவம் சமீபத்தில் நடத்திய வான்வழி தாக்குதலுக்கு பதிலடியாக, எல்லை பகுதியில் உள்ள பாக்., ராணுவ நிலைகள் மீது தலிபான் படையினர் ஆவேச தாக்குதல் நடத்தினர். இதில், 58 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப் பட்டதாகவும், 30 பேர் காயமடைந்ததாகவும், ஆப்கனின் தலிபான் நிர்வாகம் அறிவித்துள்ளது.
'பாகிஸ்தானுக்குள் அடைக்கலம் புகுந்து, ஆப்கனுக்கு எதிராக சதி திட்டங்களை தீட்டி வரும்ஐ.எஸ்., பயங்கரவாதிகளை, அந்த நாடு உடனடியாக வெளியேற்ற வேண்டும். பாகிஸ்தானின் ஒவ்வொரு தாக்குதலுக்கும் சரியான பதிலடி கொடுக்கப்படும் என்றும், தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புது தலைவலி
நம் அண்டை நாடான பாகிஸ்தான், பல்வேறு பயங்கரவாத குழுக்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. இந்த ஆதரவு சில நேரங்களில் அவர்களுக்கே எதிராக திரும்புவதும் உண்டு.
நம் நாட்டை போன்று தேர்தல் வாயிலாக அந்நாட்டு அரசை மக்கள் தேர்ந்தெடுத்தாலும், அந்த அரசு பெரும்பாலும் அந்நாட்டு ராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.
இதனால், அந்நாட்டு அரசு பலமுறை கவிழ்க்கப்பட்டு ராணுவ ஆட்சி நடக்கும் சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறும்.
இந்நிலையில், தற்போது டி.டி.பி., எனும் தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பு, பாகிஸ்தானுக்கு புதிய தலைவலியாக உருவெடுத்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள அரசை கவிழ்த்துவிட்டு, ஆப்கானிஸ்தானில் உள்ளது போன்று தலிபான் ஆட்சியை செயல்படுத்த இந்த பயங்கரவாத அமைப்பு முயற்சிப்பதாக பாக்., புகார் தெரிவித்து உள்ளது.
ஆனால், இந்த அமைப்புக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தலிபான்கள் கூறி வருகின்றனர். பாகிஸ்தான் கைபர் பக்துங்க்வா மாகாணம், ஆப்கானிஸ்தானுடன் நீண்ட எல்லையை பகிர்ந்து கொள்கிறது.
இது மலைகள் நிறைந்த பகுதி. இப்பகுதிகளில், டி.டி.பி., மற்றும் அதன் துணை அமைப்புகள் மறைவிடங்களை அமைத்துக் கொண்டு, அவ்வப்போது பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
முதல் எதிரி
சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் பார்லிமென்ட் கூட்டத்தில் பேசிய அந்நாட்டு ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப், 'பயங்கரவாதிகளை ஆப்கானிஸ்தான் ஆதரித்து வருகிறது.
'இனியும் பாகிஸ்தானுக்கு எதிராக நடக்கும் பயங்கரவாத தாக்குதல்களை பொறுத்துக்கொள்ள முடியாது. நம் பொறுமைக்கும் எல்லையுண்டு. ஆப்கானிஸ்தான் தான் நமக்கு முதல் எதிரி' என, ஆப்கனுக்கு எச்சரிக்கை
தொடர்ச்சி 17ம் பக்கம்
விடுவது போன்று பேசியிருந்தார்.
அமைச்சர் பேசிய 48 மணி நேரத்திற்குள், பாகிஸ்தான் விமானப்படை ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள குறிப்பிட்ட பகுதிக்குள் நுழைந்து, வான்வழி தாக்குதல் நடத்தி குண்டுமழை பொழிந்தன. இது, டி.டி.பி.,யின் தலைவர் நுார் வாலி மெஹ்சுத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என கூறப்படுகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் மெஹ்சுத்தின் மகன் கொல்லப்பட்டார். இந்த எல்லை தாண்டிய வான்வழி தாக்குதலை ஆப்கன் தலிபான் அரசு வன்மையாக கண்டித்திருந்தது.
இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, துரந்த் எனும் எல்லைக்கோட்டுப் பகுதியை ஒட்டியுள்ள பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது, தலிபான் படைகள் நேற்று முன்தினம் இரவு சரமாரியாக தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில், 58 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 30 பேர் காயமடைந்ததாகவும் தலிபான் அரசின் தலைமை செய்தி தொடர்பாளர் சபீஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
ஆப்கன் படையின் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. பாக்., ராணுவத்தினர் 58 பேர் கொல்லப்பட்டனர். அவர்களது 25 ராணுவ நிலைகளையும் கைப்பற்றியுள்ளோம்.
ஆப்கனுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளை பாகிஸ்தான் அரசும், அந்த நாட்டு ராணுவமும் துாண்டி விடுகின்றன. அவர்கள் எங்களுக்கு எதிராக மட்டுமல்ல, உலக நாடுகளுக்கு எதிராகவும் சதித்திட்டங்களை தீட்டி, அமைதியை சீர்குலைக்கின்றனர்.
எங்கள் நாட்டில் இருந்த அனைத்து பயங்கரவாத அமைப்புகளையும் ஒழித்துவிட்டோம். ஆப்கானிஸ்தானில் ஒரு பயங்கரவாதி கூட இல்லை. மற்றொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதற்கு எந்த ஒரு பயங்கரவாதிக்கும், இங்கு இடம் தர மாட்டோம்.
ஆனால், பாகிஸ்தான் அரசு, ஐ.எஸ்., அமைப்பினருக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாக்கிறது. அவர்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது பாகிஸ்தானிலிருந்து வெளியேற்ற வேண்டும்.
எங்கள் நாட்டிற்குள் எந்த முன் அறிவிப்பும் இன்றி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளோம். பாகிஸ்தானின் ஒவ்வொரு தாக்குதலுக்கும் சரியான பதிலடி கொடுக்கப்படும். இந்த சண்டையில் எங்கள் தரப்பில் ஒன்பது வீரர்கள் உயிரிழந்தனர்.
எல்லையை, இறையாண்மையை பாதுகாத்து கொள்ளும் உரிமை எங்களுக்கு உள்ளது. அதன்படியே, இந்த பதிலடியை கொடுத்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியதாவது:
தலிபான் படையினர், எல்லையில் உள்ள பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இருப்பினும், பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தானின் தாக்குதலை முறியடித்து, அவர்களை பின்வாங்க செய்துள்ளது. டி.டி.பி., பயங்கரவாதிகளை பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைய உதவவே இந்த தாக்குதலை தலிபான்கள் நடத்தியுள்ளனர். எங்கள் பதிலடி மிக மோசமாக இருக்கும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இரு தரப்புக்கும் இடையே, கைபர் பக்துங்க்வா மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில் உள்ள எல்லைப்பகுதிகளில் கடுமையான மோதல்கள் நடந்ததாக கூறப்படுகிறது. கத்தார் மற்றும் சவுதி நாடுகளின் தலையீட்டுக்-கு பின் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டதாக தலிபான் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அதன் முக்கிய வர்த்தக பாதைகளான தோர்கம், சாமன் உட்பட பல எல்லைகளை கடக்கும் வழிகளை உடனடியாக மூடியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.