துப்பாக்கிச் சூடு நடத்த துாண்டியதா ஏ.ஐ.,யிடம் விசாரணை
துப்பாக்கிச் சூடு நடத்த துாண்டியதா ஏ.ஐ.,யிடம் விசாரணை
ADDED : ஏப் 22, 2026 09:03 PM

நியூயார்க்:அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், 'சாட் ஜிபிடி' என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வன்முறைக்குத் துாண்டுதலாக இருந்ததா என்பது குறித்து குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு புளோரிடா மாகாண பல்கலைக்கழகத்தில் பீனிக்ஸ் இக்னர் என்ற மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகினர்; பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது அந்த மாணவரின் 'சாட் ஜிபிடி' உரையாடல்கள் சிக்கியுள்ளன.
அந்த இளைஞர், துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு, சாட் ஜிபிடி-யிடம் 13,000-க்கும் மேற்பட்ட செய்திகளைப் பரிமாறியுள்ளார். எந்த வகையான துப்பாக்கியைப் பயன்படுத்தலாம், எந்த நேரத்தில் பல்கலைக்கழகத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும், எந்த இடத்தில் தாக்குதல் நடத்தினால் அதிக பாதிப்பு ஏற்படும் என்பது போன்ற கேள்விகளை அவர் கேட்டுள்ளார்.
இதற்கு அந்த ஏ.ஐ., மென்பொருள் இணையத்தில் உள்ள தகவல்களைத் தொகுத்து பதிலளித்துள்ளது. இது குறித்து புளோரிடா அட்டர்னி ஜெனரல் ஜேம்ஸ் உத்மேயர் கூறுகையில், இந்தத் தகவல்களை ஒரு மனிதன் மற்றொருவருக்குக் கொடுத்திருந்தால், அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருக்கும். ஏ.ஐ., நிறுவனம் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். இதற்காக அந்த நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது, என்றார்.
ஆனால், நாங்கள் பொதுவெளியில் உள்ள தகவல்களைத் தான் வழங்கினோம். வன்முறையைத் துாண்டவில்லை என சாட் ஜிபிடி'யை உருவாக்கிய ஓபன் ஏ.ஐ., நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
