ட்ரோன்கள் பறந்ததால் பதற்றம் விமான நிலையங்கள் மூடல்
ட்ரோன்கள் பறந்ததால் பதற்றம் விமான நிலையங்கள் மூடல்
ADDED : செப் 24, 2025 03:48 AM
கோபன்ஹேகன்:ஐரோப்பிய நாடுகளான டென்மார்க், நார்வேயில் சந்தேகத்திற்கு இடமான வகையில், ட்ரோன்கள் பறந்ததால் முக்கிய விமானநிலையங்கள் மூடப்பட்டன.
டென்மார்க்கின் நோர்டிக் மாகாணத்தில் மிகவும் பரபரப்பாக காணப்படுவது கோபன்ஹேகன் விமான நிலையம். இந்த விமான நிலையத்தின் மீது நேற்று முன்தினம் மாலை ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் பறந்தன.
இதேபோன்று நார்வேயின் ஒஸ்லோ விமான நிலையம் அருகிலும் சந்தேகத்திற்கு இடமான வகையில் ட்ரோன்கள் பறப்பதை அதிகாரிகள் கண்டனர். இதையடுத்து உடனடியாக இரண்டு விமான நிலையங்களும் மூடப்பட்டன.
கோபன்ஹேகனுக்குச் செல்லும் 35 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. ஒஸ்லோ விமான நிலையத்திலும் 50 விமானங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன. ஏராளமான விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயணியர் பாதிக்கப்பட்டனர்.
ஐரோப்பிய விமான நிலையங்கள், சமீபத்தில் சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டன.
விமான நிலையங்களின் வருகை, புறப்பாட்டை கண்காணிக்கும் செயல்முறைக்குள், சைபர் குற்றவாளிகள் நுழைந்து அதை செயலிழக்க வைத்தனர்.
இந்த சூழ்நிலையில் ட்ரோன்கள் பறந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ட்ரோன்கள் ரஷ்யாவுக்கு சொந்தமானதா என்று கேட்டபோது, அதை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ முடியாது என்று கோபன்ஹேகன் போலீசார் தெரிவித்தனர்.
ட்ரோன்கள் உடனடியாக மாயமானதாவும், அவற்றில் எதையும் கைப்பற்றவில்லை என்றும் கூறினர். அவை என்ன வகையான ட்ரோன்கள் என்பதைக் கண்டறிய டென்மார்க், நார்வே போலீசார் இணைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.