எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய சவுதியுடன் அஜித் தோவல் பேச்சு
எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய சவுதியுடன் அஜித் தோவல் பேச்சு
ADDED : ஏப் 20, 2026 07:44 PM

ரியாத் : நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டு, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு மத்தியில் இந்தியர்களின் நலன் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் முயற்சிகளில் நம் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக, நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், நேற்று மேற்காசிய நாடான சவுதி அரேபியாவுக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்றார்.
தலைநகர் ரியாத்தில் அவர், அந்த நாட்டின் எரிசக்தி அமைச்சரான இளவரசர் அப்துல் அஜீஸ் பின் சல்மான், வெளியுறவு அமைச்சரான இளவரசர் பைசல் பின் பர்ஹான் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டாக்டர் முசாயித் அல் ஐபான் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின்போது இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள், எரிசக்தி மற்றும் ராணுவ ஒத்துழைப்பு, பிராந்திய வளர்ச்சிகள் உட்பட பல விஷயங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டதாக நம் இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய எரிபொருள் இறக்குமதியாளர்களில் ஒன்றாக நம் நாடு உள்ளது. அதிலும் மேற்காசிய நாடான சவுதி அரேபியா, நம் நாட்டிற்கு முக்கிய எரிசக்தி வழங்கும் நாடாக திகழ்கிறது. ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வரும் நிலையிலும், ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாகவும், சவுதி அரேபியா போன்ற நம்பகமான எரிசக்தி வழங்கும் நாடுகளுடன் மத்திய அரசு தொடர்பை வலுப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்தப் பயணம் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
