டெங்கு காய்ச்சலை தடுக்க சிங்கிள் டோஸ் தடுப்பூசி: பிரேசில் அரசு ஒப்புதல்
டெங்கு காய்ச்சலை தடுக்க சிங்கிள் டோஸ் தடுப்பூசி: பிரேசில் அரசு ஒப்புதல்
UPDATED : நவ 27, 2025 10:31 PM
ADDED : நவ 27, 2025 10:30 PM

பிரேசிலியா: டெங்கு காய்ச்சலை தடுக்க பிரேசில் நிறுவனம் தயாரித்துள்ள ஒற்றை டோஸ் தடுப்பூசிக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. டெங்குவுக்கு எதிரான போராட்டத்தில் இந்த தடுப்பூசியானது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
கொசுக்கடியால் பரவும் டெங்கு காய்ச்சலுக்கு ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். முந்தைய காலங்களை விட தற்போது டெங்குக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக கடந்த 2023ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் எச்சரித்து இருந்தது. உலக மக்கள் தொகையில் பாதி பேர் இந்த நோயால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. டெங்கு காய்ச்சலைதடுக்க ஜப்பானின் இரண்டு டோஸ் TAK-003தடுப்பூசியும், 3 டோஸ் போடப்படும் தடுப்பூசியும் உள்ளன.
இந்நிலையில், பிரேசிலின் பூடன்டன் நிறுவனம் ஒரு டோஸ் மட்டுமே போடப்படும் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. பூடன்டன் -டிவி என பெயரிடப்பட்டுள்ள து. 12 முதல் 59வயதுக்கு உட்பட்டோருக்கு செலுத்தப்படும் இந்த தடுப்பூசிக்கு பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிரேசிலில் கடந்த 8 ஆண்டுகளாக பரிசோதனையில் இருந்த தடுப்பூசி தற்போது பயன்பாட்டுக்கு வருவது என்பது டெங்குவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மருத்துவ பரிசோதனையில் 16 ஆயிரம் பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தி பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் டெங்குவை தடுப்பதில் இந்த தடுப்பூசி 80 சதவீதம் திறன் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. டெங்குவால் பாதிக்கப்படாதவர்களுக்கு இது 74 சதவீதம் பாதுகாப்பையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு 89 சதவீதம் பாதுகாப்பையும் இந்த தடுப்பூசி வழங்கும் என பிரேசில் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த தடுப்பூசியானது 2- 6 வயதுள்ள குழந்தைகளுக்கு 80 சதவீத பாதுகாப்பையும், 7- 17 வயதுள்ளவர்களுக்கு78 சதவீத பாதுகாப்பையும், 59 வயதுள்ளவர்களுக்கு 90 சதவீத பாதுகாப்பையும் இந்த தடுப்பூசி வழங்கும் எனவும் அதேநேரத்தில் பக்கவிளைவாக லேசான காய்ச்சல் அல்லது தலைவலி ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

