முடங்கியது 'அமேசான் வெப் சர்வீசஸ்' பிரபல டிஜிட்டல் தளங்கள் தவிப்பு
முடங்கியது 'அமேசான் வெப் சர்வீசஸ்' பிரபல டிஜிட்டல் தளங்கள் தவிப்பு
ADDED : அக் 21, 2025 07:23 AM

வாஷிங்டன்: 'அமேசான் வெப் சர்வீசஸ்' சேவையில் பழுது ஏற்பட்டதால், 'ஸ்னாப்சாட், பெர்ப்ளெக்சிட்டி ஏ.ஐ.,' உட்பட பல்வேறு செயலிகள், தளங்கள் முடங்கின. இதன் காரணமாக உலகம் முழுதும் உள்ள பயனர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'அமேசான்' நிறுவனத்தின் துணை நிறுவனமான, 'அமேசான் வெப் சர்வீசஸ்' சேவையை பயன்படுத்தி, பிரபல ஏ.ஐ., தளமான 'பெர்ப்ளெக்சிட்டி, ஸ்னாப்சாட், போர்ட்னைட்' போன்ற பிரபல செயலிகள் உட்பட பல்வேறு, 'டிஜிட்டல்' தளங்கள் இயங்கி வருகின்றன .
இந்த நிறுவனம், 'கிளவுட் கம்ப்யூட்டிங்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இயங்கி வருகிறது.
இந்நிலையில், 'அமேசான் வெப் சர்வீசஸ்' நிறுவனத்தின் சேவையில் நேற்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதன் காரணமாக, 'அமேசான் டாட் காம், பிரைம் வீடியோ, அலெக்சா, ராப்லாக்ஸ், ராபின்ஹூட், ஸ்னாப்சாட், பெர்ப்ளெக்சிட்டி ஏ.ஐ., வென்மோ, கான்வாஸ், சிக்னல், டூலிங்கோ, குட்ரீட்ஸ், ரிங், தி நியூயார்க் டைம்ஸ், லைப்360, போர்ட்னைட், ஆப்பிள் டிவி, வெரிசான், பப்ஜி' உள்ளிட்ட பல செயலிகளின் சே வைகள் பாதிக்கப்பட்டன.
'அமேசான் வெப் சர்வீசஸை' நம்பி தான் பல பெரும் நிறுவனங்கள் இயங்கும் நிலையில், இந்த தொழில்நுட்ப கோளாறு உலக அளவில் பல நிறுவனங்களின் இணைப்பை பாதித்தது.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில், 'அமேசான்' நிறுவனம் வெளியிட்ட தகவலில், தொழில்நுட்ப கோளாறில் ஏற்பட்ட பெரும்பாலான பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவித்தது. கடந்த ஆண்டு 'கிரவுட் ஸ்ட்ரைக்' பாதிப்புக்கு பின் பெரிய இணைய பாதிப்பாக இது பார்க்கப்படுகிறது.