'அமெரிக்காவுக்கே முன்னுரிமை': இந்தியாவின் சூரியசக்தி உட்பட 66 அமைப்புகளில் இருந்து விலகியது
'அமெரிக்காவுக்கே முன்னுரிமை': இந்தியாவின் சூரியசக்தி உட்பட 66 அமைப்புகளில் இருந்து விலகியது
ADDED : ஜன 09, 2026 12:05 AM

நியூயார்க்: அமெரிக்க நலன்களுக்கு எதிரானதாக உள்ளதாகக் கூறி, இந்தியா தலைமையிலான சூரிய மின்சக்தி கூட்டமைப்பு உட்பட, 66 சர்வதேச அமைப்புகளில் இருந்து விலகுவதாக, அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
கெடுபிடி அமெரிக்காவின் அதிபராக, கடந்தாண்டு ஜன.,ல் பதவியேற்ற டிரம்ப், 'அமெரிக்காவுக்கே முன்னுரிமை' என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தி வருகிறார்.
விசா கட்டுப்பாடு, குடியேற்றக் கொள்கைகளில் மாற்றம் என பல்வேறு கெடுபிடிகளை காட்டி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, 66 சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா உடனடியாக விலக வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அதிபரின் வெள்ளை மாளிகை, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
அமெரிக்க வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும், நாட்டின் இறையாண்மைக்கு எதிரான கொள்கைகளை கொண்டுள்ளதாகவும் கருதப்படும், 66 அமைப்புகளில் இருந்து உடனடியாக விலக உத்தரவிடப்பட்டுஉள்ளது.
இதில், 35 அமைப்புகள் ஐ.நா.,வுடன் தொடர்பில்லாதவை; மீதமுள்ள 31 அமைப்புகள் ஐ.நா.,வுடன் இணைந்தவை.
குறிப்பாக, பருவநிலை மாற்றம் தொடர்பான முக்கிய அமைப்புகள், ஐ.நா., அமைதி பணிகள் உள்ளிட்டவை இதில் அடங்கும். இந்த அமைப்புகளுக்கு நிதி வழங்குவதையும், அவற்றுடன் தொடர்பு கொள்வதையும் நிறுத்தும்படி, அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பின்னடைவு
இந்தியா மற்றும் பிரான்ஸ் தலைமையிலான சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டமைப்பும் இந்தப் பட்டியலில் அடங்கும். சூரிய மின்சக்தியை உலகளவில் ஊக்குவிக்கும் இந்த அமைப்பில் 100க்கும் மே ற்பட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
அமெரிக்கா இதில் இருந்து விலகுவது, உலக சூரிய மின்சக்தி முயற்சிகளுக்கு சிறிய பின்னடைவை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
