ADDED : ஜூன் 01, 2024 05:00 PM

வாஷிங்டன்: அமெரிக்காவில் ‛ வீ வொர்க் ' என்ற நிறுவனத்தின் பங்குகளை அதிகளவில் வாங்கிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆனந்த் யார்டி என்பவர் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி(சிஇஓ) ஆக நியமிக்கப்பட்டு உள்ளார். அந்த நிறுவனம் திவால் நிலை கோரி விண்ணப்பித்த நிலையில் ஆனந்த் யார்டி தலைமை பொறுப்புக்கு வந்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வீவொர்க் நிறுவனத்தை 2010ம் ஆண்டு, ஆடம் நியூமேன் மற்றும் மிகல் மெக்கெல்வே ஆகியோரால் துவக்கப்பட்டது. வெவ்வேறு நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர்கள், அலுவலக இடம், உபகரணங்கள், வரவேற்பாளர், பாதுகாவலர் சேவைகள் என ஒரு சேர அனைத்தையும் ஒன்றாகப் பகிர்ந்து கொள்ளும் ஐடியாவை பயன்படுத்தி இந்த நிறுவனம் துவங்கப்பட்டது.
துவங்கப்பட்ட போது இந்த நிறுவனத்தின் மதிப்பு 47 பில்லியன் டாலர் ஆக இருந்தது. ஆனால், கோவிட் காரணமாக பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் இதுவும் ஒன்று. கடும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்த இந்த நிறுவனம் 2023 நவ., மாதம் திவால் நிலைக்கு விண்ணப்பித்தது. 2024 ல் ஏப்., மாதம் இந்த நிறுவனத்தின் மதிப்பு 750 மில்லியன் டாலர் ஆக சரிந்தது. இந்த நிறுவனத்தின் பங்குகளை, தற்போது அதிகமாக வாங்கி ஆனந்த் யார்டி, அதன் சி.இ.ஓ., ஆக மாறி உள்ளார்.
யார் இவர்
1.இந்தியாவில் பிறந்த இவர், 1968 ல் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்.
2.1963 ல் ஜேஇஇ தேர்வில் முதலிடத்தை பிடித்த இவர், டில்லி ஐஐடியில் பிடெக் முடித்தார். அப்போது தங்கப்பதக்கம் வென்றார்.
3.அமெரிக்காவின் பெர்க்லேயில் உள்ள கலிபோர்னியா பல்கலையில் அறிவியல் படிப்பில் முதுகலை படிப்பை முடித்தார்.
4.அமெரிக்காவில், பாரோக்ஸ் கார்பரேசன் என்ற நிறுவனத்தில் 14 ஆண்டுகள் பணியாற்றினார்.
5.1984 ல், யார்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்தை துவக்கி, தற்போது வரை அதன் தலைவராக உள்ளார். அவரது தலைமையில் சிறப்பாக செயல்படும் இந்த நிறுவனம் ஆண்டுக்கு 3 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டி வருகிறது இந்த நிறுவனம்.
6.அமெரிக்காவில் பல அமைப்புகளின் விருதுகளையும் வாங்கி உள்ளார்.