வளரும் நாடுகள் இல்லாத அமைப்பு சிம் இல்லாத மொபைல் போன்றவை: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
வளரும் நாடுகள் இல்லாத அமைப்பு சிம் இல்லாத மொபைல் போன்றவை: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
ADDED : ஜூலை 07, 2025 08:13 AM

ரியோ டி ஜெனிரோ :  ''வளரும் நாடுகள் இல்லாத உலக அமைப்புகள், சிம் கார்டு இல்லாத மொபைல் போன்கள் போன்றவை,'' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
கானா, டிரினிடாட் அண்டு டொபாகோ, அர்ஜென்டினா நாடுகளின் பயணத்தை முடித்த பிரதமர் மோடி, தென் அமெரிக்க நாடான பிரேசிலுக்கு நேற்று சென்றார்.
ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்த பிரிக்ஸ் கூட்டமைப்பின், 17வது உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்றார்.
இதில், கூட்டமைப்பின் தலைவர்களும் பங்கேற்றனர். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகியவை அடங்கிய அமைப்பு, பிரிக்ஸ் எனப்படுகிறது.
உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:
உலகப் பொருளாதாரத்தில், 'குளோபல் சவுத்' எனப்படும் வளரும் நாடுகள் பெரும் பங்களிப்பை வழங்கி வருகின்றன. ஆனால், இந்த நாடுகளுக்கு உலக அமைப்புகளில் முடிவெடுக்கக் கூடிய இடத்தில் அதிகாரம் வழங்கப்படுவதில்லை. இது பிரதிநிதித்துவம் பற்றியது மட்டுமல்ல, நம்பகத்தன்மை மற்றும் செயல்திறன் பற்றியதும் கூட. வளரும் நாடுகள் இல்லாத உலக அமைப்புகள், சிம் கார்டு இல்லாத மொபைல் போன்றவை.
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், உலக வர்த்தக அமைப்பு போன்றவற்றில், 21ம் நுாற்றாண்டு காலத்துக்கேற்ப சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அனைத்து நாடுகளையும் உள்ளடக்கியதாக உலக அமைப்புகள் இருக்க வேண்டும். அதில், வளரும் நாடுகளுக்கு உரிய முக்கியத்துவமும், அதிகாரமும் வழங்கப்பட வேண்டும்.
தற்போதைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பக் காலத்தில், ஒவ்வொரு வாரமும் தொழில்நுட்பம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அப்படியிருக்கையில், 80 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூட, உலக நாடுகளை உள்ளடக்கிய ஒரு அமைப்பு புதுப்பிக்கப்படாமல் இருப்பதை ஏற்க முடியாது.
எங்களது சொந்த நலன்களை விட மனிதகுல நலனுக்காக இணைந்து செயல்பட்டு வருகிறோம். பிரிக்ஸ் நாடுகளுடன் சேர்ந்து அனைத்து துறைகளிலும் ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளை வழங்க உறுதிபூண்டுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த மாநாட்டுக்கு இடையே, பிரிக்ஸ் கூட்டமைப்பின் நாடுகளின் தலைவர்களையும், உறுப்பினர் நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார்.
இந்த உச்சி மாநாட்டில், சீன அதிபர் ஷீ ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பங்கேற்கவில்லை.

