கண்மூடித்தனமாக 92 பேரை சுட்டுக் கொன்றது ஏன்? ப்ரீவிக் பரபரப்பு வாக்குமூலம்
கண்மூடித்தனமாக 92 பேரை சுட்டுக் கொன்றது ஏன்? ப்ரீவிக் பரபரப்பு வாக்குமூலம்
ADDED : ஜூலை 24, 2011 09:55 PM

ஆஸ்லோ : நார்வேயில் துப்பாக்கிச்சூடு நிகழ்த்திய ஆண்டர்ஸ் பேரிங் ப்ரீவிக், 32, தான் மட்டுமே இத்தாக்குதலில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளார்.
'தன் செயல் கொடூரமானது என்றாலும், அவசியமானதும் கூட' என்றும் கூறியுள்ளார். தாக்குதல் நடத்தியது ஏன் என்பது குறித்து, பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
நார்வேயில் கடந்த 22ம் தேதி, பிரதமர் அலுவலகத்தில் திடீரென குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் ஏழு பேர் பலியாகினர். இதையடுத்து, இரண்டு மணி நேரம் கழித்து, உடோயா தீவில், ஆளும் தொழிலாளர் கட்சியின் இளைஞர் அணி பயிற்சி முகாமில், போலீஸ் உடையில் புகுந்த ஒரு நபர், கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் 85 பேர் பலியாகினர். இரு தாக்குதல்களையும் நடத்தியதாக, ஆண்டர்ஸ் பேரிங் ப்ரீவிக், 32, உடோயா தீவிலேயே கைது செய்யப்பட்டார். நார்வே போலீசார் அவரிடம் கடந்த இருநாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஆஸ்லோவில் உள்ள ப்ரீவிக்கின் வீட்டில், நேற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.
ப்ரீவிக்கிடம் நடந்த விசாரணை குறித்து, நார்வே போலீஸ் அதிகாரி ஸ்வெயினுங் ஸ்பான்ஹெய்ம் கூறியதாவது: ப்ரீவிக் தான் தனியாக செயல்பட்டதாகக் கூறினாலும், அவர் கூறிய ஒவ்வொன்றையும் போலீசார் உறுதி செய்ய வேண்டும். சம்பவத்தை நேரில் பார்த்தவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில், அதில் ஒருவர் அல்லது பலர் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. உடோயா தீவுக்கு போலீசார் சென்ற போது, ப்ரீவிக்கைத் தவிர வேறு யாரும் கண்ணில் தட்டுப்படவில்லை. அதே நேரம், வேறொரு நபர், ப்ரீவிக்கிற்கு உதவியிருக்கலாம் என்ற கோணத்தையும் தவிர்க்க முடியாது. ப்ரீவீக் மீதான குற்றம் உறுதி செய்யப்படும் பட்சத்தில், அவருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். விசாரணையில் அவர் முழுமையாக ஒத்துழைப்பு அளித்து வருகிறார். இவ்வாறு ஸ்பான்ஹெய்ம் தெரிவித்தார்.
கொடூரம்; ஆனால் அவசியம்: உடோயா தீவில், துப்பாக்கிச்சூடு ஆரம்பித்து 90 நிமிடங்கள் கழிந்த பின்பே போலீசார் வந்ததால், அதிகம் பேரை ப்ரீவிக் சுட்டுக் கொல்ல முடிந்தது. இதுகுறித்து ப்ரீவிக்கின் வழக்கறிஞர் கூறியதாவது: அவர் தன் துப்பாக்கியில் இருந்த குண்டுகள் தீரும் வரை சுட்டார். இத்தாக்குதல் கொடூரமானது என்றாலும் கூட, அவசியமானதுதான் என்று கருதுகிறார். 'நார்வே சமூகத்தைத் திருத்த இந்த நடவடிக்கை அவசியம்' என்றும் கூறுகிறார்.
புரட்சியின் மூலம் அந்த மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என, அவர் நினைக்கிறார். இதற்காக அவர் சிறிது காலமாகவே திட்டமிட்டு வந்துள்ளார். அதே நேரம், ஆளும் தொழிலாளர் கட்சி தன் கொள்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், இறுதித் தீர்ப்பு நாள் விரைவில் வரும் என்று எச்சரிக்கவே அவர், உடோயா தீவுக்குச் சென்றார். தான் என்ன செய்துள்ளோம் என்பது குறித்து அவர் தெளிவாகவே உள்ளார். இவ்வாறு ப்ரீவிக்கின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
1,500 பக்க இணைய ஆவணம்: இதற்கிடையில், இணையத்தில் 1,500 பக்கத்திற்கு ப்ரீவிக் எழுதியுள்ள குறிப்புகள் கிடைத்துள்ளன. அதோடு, 'நைட்ஸ் டெம்ப்ளர் 2083' என்ற பெயரில் 'யூ டியூப்'பில் 12 நிமிடம் ஓடக் கூடிய ஒரு வீடியோவையும் ப்ரீவிக் பதிவு செய்துள்ளார்.
நைட்ஸ் டெம்ப்ளர் என்பது, கி.பி.1095 முதல் 1291 வரை நடந்த சிலுவைப் போர்களில் பங்கேற்ற கிறிஸ்தவ அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பைப் பின்பற்றுபவராக தம்மை ப்ரீவிக் குறிப்பிட்டுள்ளார். ப்ரீவிக் எழுதியுள்ள இணையக் குறிப்புகளில், நார்வேயின் பன்முகக் கலாசார சுதந்திரம், இஸ்லாமியர்களின் குடியேற்றம் ஆகியவை பற்றி அதிகம் உள்ளன. 2009ல் இருந்து இத்தாக்குதலுக்குத் தயாராகி வந்ததாக ப்ரீவிக் எழுதியுள்ளார்.
இரட்டைத் தாக்குதலில் ப்ரீவிக்கின் உள்நோக்கம், ஆளும் கட்சியைக் குறி வைத்ததாக இருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். இதை உறுதிப்படுத்தும் விதத்தில், எதிர்க்கட்சியும் வலதுசாரியுமான முற்போக்குக் கட்சியின் இளைஞர் அணியில், 1999 முதல் 2006 வரை உறுப்பினராக ப்ரீவிக் இருந்துள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. அதேபோல், புதிய நாஜி அமைப்பின் 'நார்டிஸ்க்' என்ற இணைய அமைப்பிலும் ப்ரீவிக் உறுப்பினராக இருந்துள்ளார்.
தேடுதல் வேட்டை:
இந்நிலையில், உடோயா தீவில் மேலும் சிலர் தண்ணீரீல் மூழ்கியிருக்கக் கூடும் என்பதால், சிறிய நீர்மூழ்கிக் கப்பல் மூலம் அவர்களைத் தேடும் பணி தொடர்கிறது. அதேபோல், பிரதமர் அலுவலக குண்டுவெடிப்பில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி சிலர் பலியாகியிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
பலியானோருக்காக, நேற்று நாடு முழுவதும் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடந்தன. முக்கிய சர்ச் ஒன்றில் நேற்று நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில், மன்னர் ஐந்தாம் ஹரால்டு, ராணி சோஞ்சா மற்றும் பிரதமர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியா கண்டனம் : நார்வே தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில்,'இச்சம்பவங்கள் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கின்றன. அப்பாவி மக்களின் இறப்பிற்கு காரணமான இந்த வன்முறை, முட்டாள்தனமான செயல்' என கூறப்பட்டுள்ளது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், 'இத்தாக்குதல் மிகக் கொடியது. பயங்கரவாதத்தின் எந்த ஒரு செயலும் குற்றமே' என கண்டித்துள்ளது.