இலங்கையின் புதிய அதிபராக பதவி ஏற்றார் அனுரா திசநாயகே!
இலங்கையின் புதிய அதிபராக பதவி ஏற்றார் அனுரா திசநாயகே!
UPDATED : செப் 23, 2024 10:57 AM
ADDED : செப் 23, 2024 10:04 AM

கொழும்பு: இலங்கையின் புதிய அதிபராக அனுரா திசநாயகே இன்று பதவி ஏற்றார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அண்டை நாடான இலங்கையில், அதிபர் பதவிக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. அந்த நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக மிகவும் அதிகபட்சமாக, 38 பேர் இதில் போட்டியிட்டனர். இரண்டாம் சுற்று ஓட்டு எண்ணிக்கையைத் தொடர்ந்து, தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் அனுரா குமார திசநாயகே, 56, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அவர் இன்று (செப்.,23) இலங்கையின் ஒன்பதாவது அதிபராக பதவியேற்றார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.யார் இந்த அனுரா திசநாயகே?
* அனுரா குமார திசநாயகே, நீண்ட அரசியல் அனுபவம் உள்ளவர். பள்ளியில் படிக்கும்போதே, ஜே.வி.பி., எனப்படும் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியில் இணைந்து பணியாற்றினார். கல்லுாரியிலும் இது தொடர்ந்தது. படிப்படியாக கட்சியில் அவர் முன்னேறி வந்தார்.
* கடந்த, 1995ல் கட்சியின் மாணவர் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளரானார். தொடர்ந்து, 1998ல் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினரானார். கட்சி தலைவர் சோமவான்சா அமரசிங்கேவுடன் இணைந்து செயல்பட்டார். அதிபர் சந்திரிகா குமாரதுங்கா அரசுக்கு இந்தக் கட்சி ஆதரவு அளித்தது.
* கடந்த, 2004ல் அமைச்சரானார் திசநாயகே. ஆனால், புலிகள் அமைப்புடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்துக்காக, 2005ல் அவரும், கட்சியின் மற்ற அமைச்சர்களும் பதவி விலகினர்.ஜே.வி.பி. கட்சியின் தலைவராக, 2014ல் பொறுப்பேற்றார் திசநாயகே.
* கடந்த, 2004 முதல் தொடர்ந்து மூன்று எம்.பி.,யாக தேர்வானார்.கடந்த, 2019ல் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பிடித்தார். தற்போதைய தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அவர், அவர் அதிபராக பதவி ஏற்றுள்ளார்.
* புதிய அதிபருக்கு தோல்வி அடைந்த வேட்பாளர்கள் ரணில் விக்கிரமசிங்கே, சஜித் பிரேமதாசா வாழ்த்து தெரிவித்துள்ளனர். புதிய அரசுக்கு தங்கள் முழு ஒத்துழைப்பு கிடைக்கும் என இரு வேட்பாளர்களும் அறிவித்துள்ளனர்.