sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இலங்கை பார்லிமென்டில் பெரும்பான்மையை கைப்பற்றியது அனுரா கட்சி

/

இலங்கை பார்லிமென்டில் பெரும்பான்மையை கைப்பற்றியது அனுரா கட்சி

இலங்கை பார்லிமென்டில் பெரும்பான்மையை கைப்பற்றியது அனுரா கட்சி

இலங்கை பார்லிமென்டில் பெரும்பான்மையை கைப்பற்றியது அனுரா கட்சி

8


UPDATED : நவ 16, 2024 06:42 AM

ADDED : நவ 15, 2024 08:37 AM

Google News

UPDATED : நவ 16, 2024 06:42 AM ADDED : நவ 15, 2024 08:37 AM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொழும்பு: இலங்கை பார்லிமென்ட் தேர்தலில் அதிபர் அனுர குமாரவின் தேசிய மக்கள் சக்தி கட்சி 159 இடங்களை கைப்பற்றி உள்ளது. அக்கட்சி 61.6 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது.

கடும் போட்டி


மொத்தம் உள்ள 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை பார்லிமென்டுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அதிபர் அனுரா குமாராவின் தேசிய மக்கள் சக்தி கட்சி, முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் புதிய ஜனநாயக முன்னணி, முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் பொதுஜன முன்னணி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டுள்ளன. அதேபோல, தமிழர் கட்சிகளும் தனித்தனியே களம் கண்டன.

விஸ்வரூபம்


ஓட்டுப்பதிவு முடிந்த கையோடு, ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. வழக்கம் போல அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியே, இந்த முறையும் பார்லிமென்ட் தேர்தலில் முன்னிலை வகிக்கிறது. கடந்த தேர்தலில் வெறும் 3 இடங்களை மட்டுமே பெற்றிருந்த அதிபர் குமாராவின் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு இந்த முறை தனிப்பெரும்பான்மையை காட்டிலும் கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அனைத்து கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி, தேசிய மக்கள் சக்தி ஒட்டுமொத்தமாக 61.6 சதவீத ஓட்டுக்களை பெற்றது.

சஜித் பிரேமதாசா தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி 17.7 சதவீத ஓட்டுக்களுடன் 2வது இடத்தை பிடித்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி 4.5 சதவீத ஓட்டுடன் 3வது இடத்தையும்,

ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன முன்னணி 3.1 சதவீத ஓட்டுடன் 4வது இடத்தையும் பிடித்துள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி 2.3 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது.

மோசமான நிலை


தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரையில் கடந்த முறை பெற்ற இடங்களில் கூட முன்னிலைப் பெறவில்லை. குறிப்பாக, தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளான, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு, திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளிலும், அதிபரின் தேசிய மக்கள் சக்தி கட்சியே வெற்றி பெற்றது.

யாழ்ப்பாணத்தில் இதுவரை தமிழர் கட்சிகளே முதலிடம் பெற்று வந்த நிலையில், முதல்முறையாக இந்த தேர்தலில், அதிபர் அனுராவின் தேசிய மக்கள் சக்தி கட்சி முதலிடம் பெற்றது. அடுத்தடுத்த இடங்கள் தான் தமிழர் கட்சிகளுக்கு கிடைத்துள்ளன.

கடந்த முறை தமிழ் கூட்டமைப்பு என்ற பெயரில் போட்டியிட்ட நிலையில், இந்த முறை தமிழ்க் கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டதால், இந்த பின்னடைவை சந்தித்துள்ளன.

வரவேற்பு


தேர்தலுக்கு சில நாட்கள் முன்னதாக யாழ்ப்பாணத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட அதிபர் அனுரா, தமிழர் பகுதிகளில் அரசுத் துறையினர் கைப்பற்றியுள்ள நிலங்கள் அனைத்தும் திரும்ப வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது, இந்தத் தேர்தல் முடிவுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இடங்கள்


அதிபர் அனுரா குமாராவின் தேசிய மக்கள் சக்தி கட்சி 141 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கட்சிகள் பெற்ற ஓட்டுகள் அடிப்படையில் தேசிய பட்டியலுக்கான உறுப்பினர்கள் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. இதன்படி மொத்தமுள்ள 29 இடங்களில் அதிபரின் கட்சிக்கு 18 இடங்கள் கிடைத்துள்ளது. இதன்படி இலங்கை பார்லிமென்ட்டில் தேசிய மக்கள் சக்தி கட்சி 159 இடங்களை பிடித்து உள்ளது.

தேர்தல் முடிவு குறித்து அதிபர் அனுரா குமாரா கூறுகையில், 'தேசிய மக்கள் சக்தி கட்சி தான் அரசை நடத்த வேண்டும் என்பதை இலங்கை மக்கள் முடிவு செய்திருப்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன,' என தெரிவித்துள்ளார்.

மற்ற கட்சிகள்


225 இடங்களைக் கொண்ட இலங்கை பார்லிமென்டில் பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில், அதிபர் அனுரா குமாராவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி உள்ளது.

முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸாவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 40 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை தமிழ் அரசு கட்சி 8 இடங்களிலும்,

ரணில் விக்ரமசிங்கேவின் புதிய ஜனநாயக முன்னணி கட்சி 5 இடங்களிலும்,

இலங்கை பொதுஜன பெரமுனா 3 இடங்களிலும்

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

இதன்மூலம், அதிபர் அனுரா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் தோல்வி


ரணில் விக்ரமசிங்கே அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த அனைவரும் இந்த தேர்தலில் தோல்வியை தழுவினர்.

2 மலையகப் பெண்கள்


பார்லிமென்ட் தேர்தலில் நுவெரலியா மாவட்டத்தில் இருந்து கலைச்செல்வியும், பதுளையில் இருந்து அம்பிகா சாமுவேல் என்பவரும் வெற்றி பெற்றனர். மலையகப் பெண்களான இவர்கள், தேசிய மக்கள் கட்சி சார்பில் வெற்றி பெற்றனர்.

தோல்வி


தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவர் நீண்ட காலமாக இலங்கை பார்லிமென்டில் உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மகிழ்ச்சி


இலங்கை அதிபர் வெளியிட்ட அறிக்கையில், மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள்கொடுத்த அனைவருக்கும் நன்றி எனக்கூறியுள்ளார்.

இந்தியா உறுதி


இலங்கை பார்லிமென்ட் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக அதிபர் அனுரா குமாரவிற்கு இந்தியா வாழ்த்து தெரிவித்துள்ளது. அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த அந்நாட்டிற்கான இந்திய தூதர் சந்தோஷ்ஜா, இருதரப்பு உறவுகளை பலப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார்.

ஜப்பான் வாழ்த்து


இலங்கை அரசுக்கு அதிக நிதியுதவி செய்யும் நாடுகளில் ஒன்றான ஜப்பானும், தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்காக இலங்கை அரசுக்கு பாராட்டு தெரிவித்து உள்ளது.






      Dinamalar
      Follow us