ஆப்பிளின் முதல் மடிக்கும் ஐபோன் அறிமுகம்! ஐபோன் 18 ப்ரோ, ப்ரோ மேக்ஸ் வெளியீடு
ஆப்பிளின் முதல் மடிக்கும் ஐபோன் அறிமுகம்! ஐபோன் 18 ப்ரோ, ப்ரோ மேக்ஸ் வெளியீடு
ADDED : செப் 10, 2026 12:44 AM

குபெர்டினோ: ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் அறிமுக நிகழ்ச்சி அமெரிக்காவின் குபெர்டினோவில் நடந்தது. இதில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அந்நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் 'ஐபோன் டியோ' அறிமுகம் செய்யப்பட்டது. இதனுடன், ஐபோன் 18 ப்ரோ, ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 12, வாட்ச் அல்ட்ரா 4, ஏர்பாட்ஸ் 5 உள்ளிட்ட புதிய சாதனங்களையும் ஆப்பிள் அறிமுகப்படுத்தியது.
ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய போன் என்பதால், ஐபோன் டியோ அறிமுகம் இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக அமைந்தது. புத்தகம் போன்று மடித்து வைத்துக்கொள்ளும் வகையிலும், திறக்கும்போது பெரிய திரையாக பயன்படுத்தும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.மடிக்கப்பட்ட நிலையில் பாஸ்போர்ட் போன்ற வடிவத்திலும், திறக்கும்போது அகலமான திரையுடனும் இருக்கும் வகையில் இதன் வடிவமைப்பு உள்ளது. மடிப்பு பகுதியில் ஏற்படும் கோடு குறைவாகத் தெரியும் வகையில் திரை தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
ஐபோன் டியோவில் சக்திவாய்ந்த ஏ20 ப்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு சார்ந்த பணிகளை வேகமாக மேற்கொள்ளும் வகையில் புதிய சிப் உருவாக்கப்பட்டுள்ளது. கேமரா உள்ளிட்ட முக்கிய அம்சங்களிலும் மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்தியாவில் ஐபோன் டியோவின் ஆரம்ப விலை ரூ.2,99,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 18 ப்ரோ
ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டன. இரு மாடல்களிலும் ஏ20 ப்ரோ சிப் இடம்பெற்றுள்ளது. கேமரா செயல்திறன், செயற்கை நுண்ணறிவு வசதிகள் மற்றும் பேட்டரி செயல்திறனில் மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஐபோன் 18 ப்ரோவின் இந்திய ஆரம்ப விலை ரூ.1,64,900 ஆகவும், ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் விலை ரூ.1,79,900 முதல் தொடங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை வழக்கமான 'ஐபோன் 18' மாடல் அறிமுக நிகழ்ச்சியில் இடம்பெறவில்லை. அதனை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாட்ச், ஏர்பாட்ஸ்
புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 12 மற்றும் வாட்ச் அல்ட்ரா 4 மாடல்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. உடல்நல கண்காணிப்பு வசதிகளில் கூடுதல் மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதைத்தொடர்ந்து, புதிய ஏர்பாட்ஸ் 5 வயர்லெஸ் இயர்பட்ஸும் அறிமுகப்படுத்தப்பட்டது. மேம்படுத்தப்பட்ட ஒலி மற்றும் சத்தத் தடுப்பு வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.
மடிக்கக்கூடிய போன் சந்தையில் நீண்ட காலமாக இருந்து வந்த சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு போட்டியாக, தற்போது ஆப்பிளும் களமிறங்கியுள்ளது. ஐபோன் டியோ அறிமுகம் மூலம் ஐபோன் வரலாற்றில் மிகப்பெரிய வடிவமைப்பு மாற்றங்களில் ஒன்றை ஆப்பிள் மேற்கொண்டுள்ளது.
