ADDED : ஜன 12, 2026 08:11 AM

பெங்களூரு: இந்திய பெண் ராணுவ அதிகாரிக்கு ஐ.நாவின் 2025ம் ஆண்டுக்கான அமைதி விருது வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஐ.நா.,பொது செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: தெற்கு சூடானில் நடைபெற்று வரும் மோதல்களை தவிர்ப்பதற்காக ஐ.நா.,வின் கோரிக்கையின் பேரில் பல்வேறு நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் அங்கு அமைதி, பாதுகாப்பு மற்றும் சமூக நம்பிக்கையை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியா சார்பில் சென்றுள்ள குழுவில் இடம்பெற்றுள்ளவர்களில் ஒருவர் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பெண் ராணுவ அதிகாரி சுவாதி சாந்தகுமார். சுவாதி பங்கு கொண்டுள்ள இந்திய குழு அடிமட்ட அளவில் பாதுகாப்பையும், சமூக நம்பிக்கையையும் வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியுள்ளது.
இவரது முயற்சியால் சூடானில் 5,000க்கும் அதிகமான பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் அவர்கள் சுதந்திரமாக நடமாடவும், உள்ளூர் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கவும் வழிவகுத்துள்ளது. நீண்ட காலமாக நிலையற்ற தன்மையால் பாதிக்கப்பட்ட ஒரு பிராந்தியத்தில் நீடித்த சமூக நம்பிக்கையை கட்டியெழுப்பி உள்ளது. என ஐ.நா., பொதுசெயலாளர் தெரிவித்து உள்ளார்
அமைதிகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களை அங்கீகரிக்கும் வகையில் 2025ம் ஆண்டுக்கான ஐ.நா.,விருதுக்காக பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டன. இறுதிச்சுற்றுக்கு நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டனர். நால்வரில் யாரை விருதுக்கு தேர்வு செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தொடர்ந்து அனைவரும் ஒரு மனதாக சுவாதி சாந்தகுமாரை தேர்வு செய்தனர்.
ஐ.நா., விருது பெறும் சுவாதி சாந்தகுமார் 2018ம் ஆண்டில் சென்னை அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் தனது பயிற்சியை முடித்தார். இரண்டு ஆண்டுகள் மேற்கு வங்கத்தின் கலிம்பாங்கில் லெப்டினன்டாகவும், அடுத்த இரண்டு ஆண்டுகள் லடாக்கின் லே மாவட்டத்தில் உள்ள காரு கிராமத்தில் கேப்டனாகவும், ஒரு வருடம் குஜராத்திலும் பணியாற்றி உள்ளார். அதன் பிறகு அவர் சூடானுக்குச் சென்றார்.

