ADDED : ஜன 19, 2025 09:35 PM

டாக்கா: வங்கதேச கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு எதிராக அந்நாட்டு கோர்ட் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது.
வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு, அவர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். அவரது கட்சி எம்.பி.யான ஷகிப் அல் ஹசன், வெளிநாட்டு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்ற பிறகு, நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக, தாயகம் திரும்பாமல் உள்ளார்.
கடந்த ஆண்டு ஆக., மாதம் முதல் அவர் பல்வேறு நாடுகளுக்கு சென்று தங்கி வருகிறார். தற்போது, அவர் இங்கிலாந்தில் உள்ள கவுன்டி கிரிக்கெட் தொடரில் விளையாடி வந்தார். அங்கும், பந்துவீச்சு சர்ச்சையில் சிக்கி, அவருக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஷகிப் அல் ஹசனுக்கு எதிராக வங்கதேச கோர்ட் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. 3 லட்சம் டாலர் மதிப்பிலான வங்கி மோசடியில் ஈடுபட்டதாக கடந்த டிசம்பர் மாதம் அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ஜன.,19ம் தேதிக்குள் ஆஜராகுமாறு கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், உத்தரவுபடி ஆஜராகாததால், ஷகிப் அல் ஹசனுக்கு எதிராக கைது வாரன்ட்டை கோர்ட் பிறப்பித்துள்ளது. இதனால், அவர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.
ஏற்கனவே, எதிர்க்கட்சிகளின் தரும் அழுத்தம் காரணமாக சொந்த நாட்டுக்கு திரும்பவே ஷகிப் அல் ஹாசன் தயக்கம் காட்டி வரும் நிலையில், கோர்ட்டின் இந்த உத்தரவு அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.