பாலியல் பலாத்கார வழக்கில் பொலிவியா நாட்டு, 'மாஜி'க்கு பிடிவாரன்ட்!
பாலியல் பலாத்கார வழக்கில் பொலிவியா நாட்டு, 'மாஜி'க்கு பிடிவாரன்ட்!
ADDED : ஜன 19, 2025 12:39 AM

லா பாஸ், பொலிவியாவில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் ஆஜராகாத, அந்நாட்டின் முன்னாள் அதிபர் இவோ மோரல்சை, 65, கைது செய்ய அந்நாட்டு நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில், கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த தேர்தலில், நீண்டகால அதிபராக இருந்த தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த இவோ மோரல்ஸ் படுதோல்வி அடைந்தார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட சோசலிஸ்ட் கட்சி தலைவர் லுாயிஸ் ஆர்க் வெற்றி பெற்றார்.
இதைத்தொடர்ந்து, கடந்த 2016ல் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இவோ மோரல்ஸ் மீது புகார் எழுந்தது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி சார்பில், அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்த இவோ மோரல்ஸ், தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக ஆளுங்கட்சியை விமர்சித்தார்.
இதற்கிடையே, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகும்படி, இவோ மோரல்சுக்கு, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் அவர் தவிர்த்தார்.
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பலாத்கார வழக்கில் ஆஜராகாத முன்னாள் அதிபர் இவோ மோரல்சை பிடித்து வர கைது வாரன்ட் பிறப்பித்து, நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, இவோ மோரல்ஸ், தன் வீட்டைச் சுற்றி பல அடுக்குகளில் பாதுகாப்பு வளையங்களை அமைத்துஉள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

