83 குழந்தைகளுக்கு தாயாகும் செயற்கை நுண்ணறிவு அமைச்சர்
83 குழந்தைகளுக்கு தாயாகும் செயற்கை நுண்ணறிவு அமைச்சர்
ADDED : அக் 27, 2025 04:06 AM

டிரானே: அல்பேனியாவில் உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சரான டயல்லா, 83, குழந்தைகளுக்கு தாயாக போவதாக பிரதமர் எடி ராமா தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியா கடந்த செப்டம்பரில், உலகிலேயே முதல் முறையாக ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு அமைச்சரை நியமித்தது.
இது உலகில் மனிதர் அல்லாத செயற்கை அமைச்சர் என்ற பெயரை பெற்றது. டயல்லா என்று பெயரிடப்பட்ட இந்த அமைச்சர் பொது கொள்முதல் துறைக்கு நியமிக்கப்பட்டார். வெளிப்படைத்தன்மையுடன், முறைகேடு எதுவும் இல்லாமல் இந்த துறை செயல்படும் விதமாக டயல்லா இந்த துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், அல்பேனிய பிரதமர் எடி ராமா செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட அமைச்சர் டயல்லா, கர்ப்பமாக இருப்பதாகவும் 83 குழந்தைகள் பிறக்கும் எனவும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
இது குறித்து பிரதமர் எடி ராமா கூறியுள்ள தாவது:
ஒவ்வொரு சோசலிஸ்ட் கட்சி எம்.பி.,க்களுக்கு உதவும் வகையில் 83 உதவியாளர்கள் அல்லது குழந்தைகள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக செயற்கையாக உருவாக்கப்படும் 83 உதவியாளர்கள் பார்லிமென்ட் நிகழ்வுகள் அனைத்தையும் பதிவு செய்வர்.
மேலும் எம்.பி.,க்கள் அவையில் இல்லாத போது அவர்கள் தவறவிட்ட விவாதங்கள் குறித்தும் அவர்கள் வந்ததும் தெரிவிப்பர். தேவைப்பட்டால் எதிர்க்கட்சியினருக்கு அவையில் பதிலும் அளிப்பர். இந்த புதிய முறை அடுத்த ஆண்டு இறுதியில் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும். அடுத்த முறை நீங்கள் என்னை பார்லிமென்ட்டுக்கு பேச அழைத்தால் அப்போது டயல்லாவிடம் புதிதாக 83 குழந்தைகள் எனப்படும் உதவியாளர்கள் இருப்பார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

