இந்தியர்கள் மவுசு உயருது ., அமெரிக்க பொருளாதார அமைப்பில் தலைமை பொறுப்பு
இந்தியர்கள் மவுசு உயருது ., அமெரிக்க பொருளாதார அமைப்பில் தலைமை பொறுப்பு
ADDED : ஆக 26, 2024 10:24 AM

டெக்ஸாஸ்: அமெரிக்க பொருளாதார அமைப்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவருக்கு தலைமை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
உ.பி., மாநிலத்தில் பிறந்து பின்னர் அமெரிக்காவில் குடியேறியவர் அருண் அகர்வால். இவர் காஸியாபாத்தில் உள்ள கல்லூரியில் எம்பிஏ படித்து அமெரிக்காவில் பொருளாதார ரீதியிலான பல்வேறு பட்டங்களை பெற்றவர். பிரபல நெக்ஸ்ட் என்ற வர்த்தக நிறுவன தலைவர் ஆவார் . இவர் டெக்ஸ்டைல்ஸ், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல துறைகளில் ஜொலித்து வருபவர். டெக்ஸாஸ் கவர்னர் அபோட் சமீபத்தில் இந்தியா வந்தபோது அந்த குழுவிலும் அகர்வால் இடம் பெற்றிருந்தார்.
தற்போது அமெரிக்காவின் டெக்ஸாஸ் பொருளாதார வளர்ச்சி கழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை இம்மாகாண கவர்னர் கிரக் அப்போட் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அகர்வாலை வெகுவாக பாராட்டி உள்ளார். இதில் கூறப்பட்டிருப்பதாவது:
டெக்ஸாஸ் கவர்னர் பாராட்டு
இந்த நியமனம் டெக்சாஸின் பன்முகத்தன்மைக்கான அர்ப்பணிப்பை காட்டுகிறது. மற்றும் முக்கிய பொருளாதார பிரிவுகளில் இந்திய அமெரிக்கத் தலைவர்களின் வளர்ந்து வரும் செல்வாக்கை எடுத்துக்காட்டுகிறது. வணிகம், மற்றும் சர்வதேச உறவுகளில் அகர்வாலின் விரிவான அனுபவம், உலகளாவிய பொருளாதார சக்தியாக டெக்சாஸின் நிலைப்பாட்டை மேலும் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பொறுப்பை பெற்றுள்ள அகர்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்த பொறுப்பை ஏற்று டெக்சாஸின் லட்சிய பொருளாதார நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வதில் நான் பெருமைப்படுகிறேன். நமது மாநிலத்தின் பலதரப்பட்ட திறமைகள் மற்றும் உலகளாவிய தொடர்புகளை பயன்படுத்தி பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், உலக அரங்கில் டெக்சாஸின் முக்கியத்துவத்தை வலுப்படுத்தும் பணியை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.