ADDED : செப் 05, 2025 05:26 AM

ஹாங்சோவ்,: சீனாவின் ஹாங்சோவ் நகரில், பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி 11வது சீசன் இன்று துவங்கு கிறது. இதில் இந்தியா, 'நடப்பு சாம்பியன்' ஜப்பான், மலேசியா உள்ளிட்ட 8 அணிகள், 2 பிரிவு களாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.
ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள் 'சூப்பர்-4' சுற்றுக்கு தகுதி பெறும். இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை 'ரவுண்டு-ராபின்' முறையில் மோதும். முடிவில் 'டாப்-2' இடம் பிடிக்கும் அணிகள் பைனலில் (செப். 14) விளையாடும்.
'பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, தனது முதல் போட்டியில் இன்று தாய்லாந்தை சந்திக்கிறது. அதன்பின் ஜப்பான் (செப். 6), சிங்கப்பூர் (செப். 8) அணிகளை எதிர்கொள்கிறது. 'ஏ' பிரிவில் சீனா, சீனதைபே, மலேசியா, தென் கொரியா அணிகள் இடம் பெற்றுள்ளன.
சலிமா தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. கோல்கீப்பர் சவிதா புனியா (கணுக்கால்), தீபிகா (தொடையின் பின்பகுதி) உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் காயத்தால் விலகியது பின்னடைவு. கோல்கீப்பராக பிச்சு தேவி கள மிறங்கலாம். நவ்னீத் கவுர், உதிதா, நேஹா, லால்ரெம்சியாமி உள்ளிட்ட சீனியர் வீராங்கனைகள் கைகொடுத்தால் தொடரை வெற்றியுடன் துவக்கலாம்.