வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்; பொருளாதார தடை விதிக்குமா அமெரிக்கா?
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்; பொருளாதார தடை விதிக்குமா அமெரிக்கா?
ADDED : நவ 17, 2024 12:12 AM

வாஷிங்டன்: வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில், அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க, அமெரிக்காவில் பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப் தலைமையிலான புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்திய அமெரிக்கர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இடைக்கால அரசு
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, கடந்த ஆகஸ்டில் அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டுக்கு தப்பி வந்தார்.
அப்போது நடந்த வன்முறை சம்பவங்களில், ஹிந்து கோவில்கள் தாக்கப்பட்டதோடு ஹிந்துக்கள் மீதும் தாக்குதல்கள் நடந்தன.
இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது. ஹிந்துக்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி இடைக்கால அரசை வலியுறுத்தியது.
அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.
இவர், அமெரிக்காவின் 47வது அதிபராக, அடுத்த ஆண்டு ஜன., 20ல் பதவியேற்க உள்ளார்.
தேர்தல் பிரசாரத்தின் போதே, வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தாக்கப்பட்டதற்கு டிரம்ப் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில், அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க, டிரம்ப் தலைமையிலான புதிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்திய அமெரிக்கர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து, இந்திய அமெரிக்க டாக்டர் பாரத் பராய் கூறியதாவது:
அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், தைரியமானவர். வங்கதேசத்தில் ஹிந்து கோவில்கள் மற்றும் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அவர் வெளிப்படையாக கண்டனம் தெரிவித்தார். டிரம்ப் தலைமையிலான புதிய அரசு, வங்கதேசத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.
நடவடிக்கை
இது தொடர்பாக, அமெரிக்க எம்.பி.,க்களை சந்தித்து நாங்கள் வலியுறுத்துவோம். மீது பொருளாதார தடை போன்ற நடவடிக்கைகளை டிரம்ப் நிர்வாகம் எடுக்க வேண்டும்.
வங்கதேசம் ஆடை ஏற்றுமதியை பெரிதும் நம்பி இருக்கிறது. இதற்கு தடை விதித்தால் அந்நாட்டு மக்களின் நிலை என்னவாகும்?
முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசை, வங்கதேச ராணுவம் கட்டுப்படுத்துகிறது. அந்நாட்டில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால், இந்திய அரசும் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.