வெனிசுலா மீது தாக்குதல்: டிரம்ப்புக்கு கமலா ஹாரிஸ் எதிர்ப்பு
வெனிசுலா மீது தாக்குதல்: டிரம்ப்புக்கு கமலா ஹாரிஸ் எதிர்ப்பு
UPDATED : ஜன 04, 2026 06:03 PM
ADDED : ஜன 04, 2026 05:47 PM

வாஷிங்டன்: '' வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது, அமெரிக்காவை ஆபத்தில் ஆழ்த்தும்,'' என அமெரிக்க முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரீஸ் கூறியுள்ளார். சுயேச்சை எம்பி பெர்னி சாண்டர்சும், டிரம்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு அருகில் உள்ள நாடுகளில் ஒன்று வெனிசுலா. இந்த இரு நாடுகளையும் மெக்சிகோ வளைகுடா மற்றும் கரீபியன் கடல் இணைக்கிறது. இந்த கடல் பகுதி வழியாக வெனிசுலா அமெரிக்காவுக்கு போதைப்பொருட்களை கடத்துவதாக அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வந்தார்.
இந்நிலையில், வெனிசுலா மீது நேற்று அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்தி, அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவர் மனைவியை கைது செய்து நாடு கடத்தி சென்றது.
இதற்கு அமெரிக்காவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரீஸ் மற்றும் சுயேச்சை எம்பி பெர்னி சாண்டர்ஸ் ஆகியோர் டிரம்ப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மக்கள் விரும்பவில்லை
கமலா ஹாரிஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வெனிசுலாவில் டிரம்ப்பின் நடவடிக்கை அமெரிக்காவை பாதுகாப்பானதாகவோ, வலிமையானதாகவோ மாற்றாது. மதுரோ ஒரு கொடூரமான, சட்டவிரோதமான, சர்வாதிகாரி என்பதால் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் விவேகமற்றது என்ற உண்மை மாறிவிடாது.இந்தக் காட்சிகளை நாம் முன்னரே பார்த்து இருக்கிறோம். ஆட்சி மாற்றத்துக்காக அல்லது கச்சா எண்ணெய்க்காக நடத்தப்படும் போர்கள் குழப்பத்தை ஏற்படுத்தும். அதற்கான விலையை அமெரிக்க மக்கள் செலுத்த நேரிடும். இதனை அமெரிக்க மக்கள் விரும்பவில்லை. பொய்களை கண்டு அயர்ந்து போய்விட்டனர்.
டிரம்ப்பின் நடவடிக்கை, அமெரிக்க படைகளை ஆபத்தில் ஆழ்த்துகிறது. கோடிக்கணக்கில் செலவை ஏற்படுத்துவதுடன், பிராந்தியத்தில் நிலையற்ற தன்மை உருவாகும். யாருக்கும் சட்ட அங்கீகாரம் இல்லை. வெளியேறும் திட்டம் இல்லை. உள்நாட்டிற்கு எந்தபலனும் இருக்காது.
அமெரிக்காவிற்கு உழைக்கும் குடும்பங்களுக்கான செலவுகளைக் குறைப்பது சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவது , கூட்டணிகளை வலுப்படுத்துவது மற்றும் அமெரிக்கா மக்களை முதன்மைப்படுத்துவது ஆகியவற்றைத் தங்கள் முன்னுரிமைகளாகக் கொண்ட தலைவரே தற்போது தேவைப்படுகிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
தீர்மானம் வேண்டும்
ஜனநாயக கட்சிக்கு நெருக்கமானவரும், அமெரிக்க பார்லிமென்டில் நீண்ட காலமாக எம்பியாக இருக்கும் பெர்னி சாண்டர்ஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: போர் அதிகாரத் தீர்மானத்தை உடனடியாக பார்லிமென்ட் நிறைவேற்ற வேண்டும். அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியின் மீதான தனது அவமதிப்பை டிரம்ப் மீண்டும் ஒரு முறை காட்டியுள்ளார். மதுரோ போன்ற ஊழல் நிறைந்த மற்றும் கொடூரமான சர்வாதிகாரிக்கு எதிராக இந்த நாட்டை ஒரு தலைபட்சமாக போருக்கு அழைத்து செல்லும் உரிமை அமெரிக்க அதிபருக்கு இல்லை. வெனிசுலாவை ஆட்சி செய்ய அமெரிக்காவுக்கு உரிமை கிடையாது. இந்த சட்டவிரோத ராணுவ நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வந்து அதன் அரசியலமைப்பு பொறுப்புகளை மீண்டும் உறுதிப்படுத்த அமெரிக்க பார்லிமென்ட் உடனடியாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.
வெனிசுலா மீதான டிரம்ப்பின் தாக்குதல், அமெரிக்காவுக்கும் உலகத்தின் பாதுகாப்பிற்கும் குந்தகம் ஏற்படுத்தும். சர்வதேச சட்டத்தின் இந்த வெட்கக்கேடான மீறல், பூமியில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் தங்கள் விரும்பும் வளங்களைக் கைப்பற்றவோ அல்லது அரசுகளை மாற்றவோ பச்சைக்கொடி காட்டுகிறது. உக்ரைன் மீதான தனது கொடூரமான தாக்குதலை நியாயப்படுத்த ரஷ்ய அதிபர் புடின் பயன்படுத்திய பயங்கரமான தர்க்கம் இதுதான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

