ADDED : ஜன 29, 2025 07:48 PM
கோமா:காங்கோவில், கிளர்ச்சியாளர்கள் முக்கிய நகரை கைப்பற்றி உள்ள நிலையில், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி ருவாண்டோ, பிரான்ஸ் உட்பட பல நாடுகளின் துாதரங்களை தாக்கி போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில், அந்நாட்டு ராணுவத்துக்கும், எம்.-23 என அழைக்கப்படும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக சண்டை நடந்து வருகிறது. இவர்கள் காங்கோ ராணுவத்தில் இருந்து வெளியேறிவர்கள். அரசின் அதிகார மீறலை எதிர்த்து போரிடுவதாக கூறும் எம்.-23 கிளர்ச்சியாளர்கள் கிழக்கு காங்கோவில் உள்ள முக்கிய நகரங்களை கைப்பற்றி உள்ளனர்.
எம்.23 கிளர்ச்சியாளர்கள் குழுவுக்கு அண்டை நாடான ருவாண்டா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் மறைமுகமாக உதவுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், எம்.23 குழுவினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், இந்த பிரச்னையில் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் தலைநகர் கின்ஷாசாவில் நேற்று முன் தினம் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு உள்ள வெளிநாட்டு துாதரங்களை நோக்கி போராட்டக்காரர்கள் பேரணி சென்றபோது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் போராட்டம் வன்முறையாக மாறியது.
அப்பகுதியில் உள்ள ருவாண்டா, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் பெல்ஜியம் நாட்டு துாதரங்கள் மீது பொது மக்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். நுழைவாயில்களில் பெட்ரோல் குண்டுகளை வீசி தீ வைத்தனர். இதனால் அங்கு பதற்றம் நீடிக்கிறது.

