வங்கதேசத்தில் ஹிந்துக்கோவில்கள் மீது தொடரும் தாக்குதல்: சிலைகளுக்கு தீவைப்பு
வங்கதேசத்தில் ஹிந்துக்கோவில்கள் மீது தொடரும் தாக்குதல்: சிலைகளுக்கு தீவைப்பு
UPDATED : டிச 07, 2024 10:42 PM
ADDED : டிச 07, 2024 08:57 PM

டாக்கா: வங்கதேசத்தில் ஹிந்துக்கோவில்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இன்று மேலும் 3 கோவில்களை சூறையாடிய மர்ம நபர்கள், சிலைகளுக்கு தீவைத்தனர்.
வங்கதேசத்தில் தொடர்ந்து ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்கள் மீதும், அவர்களது வழிபாட்டு தலங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் இல்லை. இதற்கு எதிராக ஹிந்துக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இருப்பினும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், டாக்காவில் நமஹட்டா மையத்தில் உள்ள இஸ்கான் கோவிலை சூறையாடிய மர்ம நபர்கள், அங்கிருந்த கடவுள் சிலைகளுக்கும் தீவைத்தனர். அதில் அங்கிருந்த லட்சுமி நாராயணர் சிலை மற்றும் பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
மேலும் டாகாவின் புறநகர் பகுதியான தோவூர் கிராமத்தில் ஹரே கிருஷ்ணா நம்ஹட்டா சங்கம் நிர்வகித்து வந்த ஸ்ரீஸ்ரீ மகாபாக்யா லட்சுமிநாராயணன் கோவில் மற்றும் ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ணா கோவிலையும் சூறையாடிய மர்ம நபர்கள் அங்கிருந்த சிலைகளுக்கு தீவைத்தனர். அதிகாலை 2 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதனை கோல்கட்டாவில் உள்ள இஸ்கான் நிர்வாகிகள் உறுதி செய்துள்ளனர்.
மகாபாக்யா லட்சுமி நாராயணன் கோவிலின் முன்பகுதியில் சிசிடிவி கேமரா இருந்தது. இதனையறிந்த மர்ம நபர்கள் பின்புறம் வந்து கோவிலை சூறையாடி சிலைக்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததும், மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.