பேஜர்' சாதனத்தில் 3 கிராம் வெடி மருந்து பக்கா பிளான்! 'வாக்கி டாக்கி'களும் வெடித்து சிதறின
பேஜர்' சாதனத்தில் 3 கிராம் வெடி மருந்து பக்கா பிளான்! 'வாக்கி டாக்கி'களும் வெடித்து சிதறின
ADDED : செப் 19, 2024 02:30 AM

பெய்ரூட் : லெபனானில், ஒரே நேரத்தில் வெடித்து சிதறிய, 3,000க்கும் மேற்பட்ட, 'பேஜர்' சாதனத்தில், மூன்று கிராம் அளவிற்கு வெடிமருந்து நிரப்பப்பட்டு, கடவுச்சொல் அனுப்பி வெடிக்க வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் இஸ்ரேலின், 'மொசாட்' உளவு அமைப்புக்கு தொடர்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், பெய்ரூட்டில், 'வாக்கி டாக்கி'களும் நேற்று வெடித்து சிதறியதில், ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையேயான போர் கடந்தாண்டு அக்., 7ல் துவங்கியது.
இந்தப் போரில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு, அண்டை நாடான லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு ஆதரவு அளித்து வருகிறது.
ஈரானின் ஆதரவைப் பெற்ற ஹிஸ்புல்லா, இஸ்ரேல் மீது தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஹிஸ்புல்லா அமைப்பை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.
இறக்குமதி
இந்நிலையில், லெபனானில் 3,000க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் பேஜர் எனப்படும் தகவல்களை அனுப்ப பயன்படுத்தப்படும் மின்னணு சாதனம், நேற்று முன்தினம் வெடித்து சிதறியது.
லெபனானின் பல்வேறு பகுதிகளில் ஒரே சமயத்தில் பேஜர் வெடித்ததில், 12 பேர் பலியாகினர்; 2,750 பேர் காயமடைந்தனர். இவர்களில், 200 பேரின் நிலை கவலைக் கிடமாக உள்ளது.
பேஜர் கருவியை பயன்படுத்தியவர்கள் மட்டுமின்றி, அருகில் இருந்தவர்களும் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்துள்ளனர். ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் நடந்த இந்த தாக்குதலில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டுக்கு தொடர்பிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு உள்ளன.
அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் துவங்கியதில் இருந்து, மொபைல் போன்களை பயன்படுத்துவதை தவிர்க்கும்படி, தங்கள் அமைப்பில் உள்ளவர்களுக்கு ஹிஸ்புல்லா உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து தங்களுக்கென சொந்த தகவல் தொழில்நுட்ப வசதியை அந்த அமைப்பு உருவாக்கியது. இதையடுத்து, அமைப்பில் உள்ள அனைவருக்கும் பேஜர் கருவி வழங்கப்பட்டது.
இதற்காக 5,000 பேஜர்களை வெளிநாட்டில் இருந்து ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் சில மாதங்களுக்கு முன் இறக்குமதி செய்தனர். தைவானைச் சேர்ந்த 'கோல்ட் அப்பல்லோ' என்ற நிறுவனம் இந்த பேஜர்களை தயாரித்து வழங்கியது.
இந்த பேஜர்கள் உற்பத்தி செய்த இடத்திலேயே வெடிக்கும் போர்ட் கருவி ஒன்றை இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் பொருத்தியது தெரியவந்துள்ளது.
அதனுடன் 3 கிராம் அளவிற்கு வெடிமருந்தும் நிரப்பப்பட்டுள்ளது. பேஜர் பயன்பாட்டின் போது, ஒரே நேரத்தில் அனைவருக்குமான 'பாஸ்வேர்ட்' எனப்படும் கடவுச்சொல் அனுப்பி அவற்றை வெடிக்க மொசாட் திட்டமிட்டது. அதன்படி, நேற்று முன்தினம் மதியம் 3:15 மணிக்கு குறிப்பிட்ட கடவுச்சொல் பேஜரின் திரையில் ஒளிர்ந்தன.
கடவுச்சொல்
இதையடுத்து, சூடான பேஜர் அடுத்த சில வினாடிகளில் வெடித்து சிதறியது. இதற்காக பல மாதங்களாக மொசாட் உளவு அமைப்பு திட்டமிட்டு செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், வெடித்த பேஜர் கருவிகளை தாங்கள் தயாரிக்கவில்லை என 'கோல்ட் அப்பல்லோ' நிறுவனத்தின் தலைவர் ஹசு சிங்-குவாங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், 'ஏ.ஆர். - 924' வகையைச் சேர்ந்த அந்த பேஜர் கருவிகளை, எங்கள் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடான ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்டில் செயல்படும் 'பிஎசி' என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
'வெடித்த பேஜர்கள் உருவாக்கத்துக்கு அந்த நிறுவனமே முழுப் பொறுப்பு' என்றார். இருப்பினும், அந்த நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம் குறித்த ஆதாரங்களை வெளியிட ஹசு சிங்-குவாங் மறுத்துவிட்டார்.
இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் உட்பட எந்த நாடும், எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
இருப்பினும், வெளிநாட்டு மண்ணில், அதிநவீன தொலைதுார தாக்குதல்களை பல முறை நிகழ்த்தியுள்ள மொசாட் அமைப்பு மீது சந்தேகம் எழுந்திருப்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, பேஜர் வெடித்ததில் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்கு, லெபனான் தலைநகர் பெய்ருட்டில் நேற்று மாலை நடந்து கொண்டிருந்தது.
அப்போது, அப்பகுதியில் பயன்பாட்டில் இருந்த, 'வாக்கி டாக்கி' கருவிகள் அடுத்தடுத்து வெடித்து சிதறின. இதில் ஒன்பது பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது.
எத்தனை வாக்கி டாக்கிகள் வெடித்து சிதறின என்ற தகவல் வெளியாகவில்லை. கிழக்கு லெபானின் சில பகுதிகளில், 'லேண்ட்லைன்' தொலைபேசிகள் வெடித்து சிதறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.