நாசவேலை வழக்கில் மாஜி பிரதமர் கலிதா ஜியா விடுதலை: வங்கதேச நீதிமன்றம் உத்தரவு
நாசவேலை வழக்கில் மாஜி பிரதமர் கலிதா ஜியா விடுதலை: வங்கதேச நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜன 22, 2025 08:41 PM

டாக்கா: நாசவேலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் , வங்கதேச மாஜி பிரதமரும் பி.என்.பி., கட்சி தலைவருமான கலிதா ஜியாவை வங்கதேச நீதிமன்றம் விடுவித்தது.
கலிதா ஜியா, மார்ச் 1991 முதல் மார்ச் 1996 வரையிலும் , ஜூன் 2001 முதல் அக்டோபர் 2006 வரையிலும் வங்கதேச பிரதமராக இருந்தார்.
ஜனவரி 25, 2015 அன்று நடந்த வேலைநிறுத்தத்தின் போது மூடப்பட்ட வேனை சேதப்படுத்தி தீ வைத்தது தொடர்பாக, ஜியா உட்பட 32 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கலிதா ஜியா 32வது குற்றவாளி. எப்.ஐ.ஆரில் 32 பேர் பெயரிடப்பட்டது. பின்னர் 42 பேராக அதிகரிக்கப்பட்டது. அவர்களில் 36 பேர் வழக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடந்து வந்தது.
இந்த வழக்கு குமிலாவின் கூடுதல் மாவட்ட மற்றும் அப்ரோசா ஜெஸ்மின் அமர்வு நீதிமன்றம்-2 கீழ் இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவில் வழக்கிலிருந்து கலிதா ஜியா விடுவிக்கப்பட்டார்.
அரசியல் காரணங்கள் மற்றும் துன்புறுத்தல் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்ததை அடுத்து, அவர் விடுவிக்கப் பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
லண்டனில் சிகிச்சை பெற்று வரும் 79 வயதான ஜியாவுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாததால் அவரை விடுவிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.
கடந்த வாரம், அனாதை இல்ல அறக்கட்டளை ஊழல் வழக்கு தொடர்பான மேல்முறையீட்டில் கலிதா ஜியா, அவரது கட்சியின் செயல் தலைவர் தாரிக் ரஹ்மான் மற்றும் அனைத்து சந்தேக நபர்களையும் உச்ச நீதிமன்றம் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.