பலத்த பாதுகாப்புடன் வங்கதேசத்தில் தேர்தல் நடந்து முடிந்தது.
பலத்த பாதுகாப்புடன் வங்கதேசத்தில் தேர்தல் நடந்து முடிந்தது.
UPDATED : பிப் 12, 2026 04:52 PM
ADDED : பிப் 12, 2026 06:37 AM

டாக்கா: வங்கதேசத்தில் இன்று (பிப்ரவரி 12) 300 இடங்களுக்கான பொதுத்தேர்தல் பலத்த பாதுகாப்புடன் நடந்து முடிந்தது. மதியம் 2 மணி நிலவரப்படி, 47.91 சதவீத ஓட்டுப்பதிவாகி உள்ளது என அந்நாட்டு தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், 2024ல் வெடித்த மாணவர் போராட்டத்தால் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. அங்கு ஜனநாயக ரீதியிலான தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு இன்று (பிப்ரவரி 12) 32,789 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.
மதியம் 2 மணி நிலவரப்படி 47.91 சதவீத ஓட்டுப்பதிவாகி உள்ளது என தேர்தல் கமிஷனின் மூத்த செயலாளர் அக்தர் அகமது தெரிவித்துள்ளார். தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி போட்டியிடவில்லை. சமீபத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான, வங்கதேச தேசியவாதக் கட்சி அடங்கிய, 10 கட்சிகள் கூட்டணி போட்டியிட்டன.
இதேபோன்று ஜமாஅத் - இ - இஸ்லாமி தலைமையிலான கூட்டணியும் களத்தில் உள்ளது. போராட்டங்களை முன்னெடுத்த மாணவர் அமைப்பினரும் போட்டியிட்டனர்.

